இந்தியாவிலேயே மிகவும் பழமையான கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெருமையை பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இது 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் சுதந்திரத்தை வாங்கி தந்த பெருமையுடன் விளங்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒருகாலத்தில் மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தது. உலகிலேயே தேர்தல் மூலம் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெருமையை கேரள மாநிலத்தில் நம்பூதிரிபாட் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி படைத்தது.
கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கம்
அப்போது மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 60 இடங்களை கைப்பற்றி கேரளாவில் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இந்திய கம்யூனிஸ்ட் அதிகபட்சமாக 1962 மக்களவை தேர்தலில் 29 இடங்களை கைப்பற்றி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. இதே ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 51 இடங்களில் வென்று அசத்தியது. இதுவே மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் பெற்ற பெரிய வெற்றியாகும். அதன்பிறகு படிப்படியாக வாக்கு வங்கி தேயத் தொடங்கியது.
தேசிய கட்சி அந்தஸ்து
தற்போது நாடாளுமன்றத்தில் வெறும் 2, மாநில சட்டமன்றங்களில் 21 (பிகார் 2, தமிழ்நாடு 2, கேரளா 17) இடங்களை பெற்று காணப்படுகிறது. இந்த சூழலில் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்து விட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம் இக்கட்சியில் இருந்து பிரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்சி அந்தஸ்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் ஆட்சி கட்டிலிலும் உள்ளது. இக்கட்சி அசாம், பிகார், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா ஆகிய மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது.
திருப்புமுனை ஏற்படுத்திய சீனப் போர்
மக்களவையில் 2 எம்.பிக்களை பெற்றிருக்கிறது. இவ்வாறு சிபிஎம் தனது அந்தஸ்தை தக்க வைத்து கொண்ட நிலையில், அதன் தாய் கட்சியான இந்திய கம்யூனிஸ்டிற்கு ஏன் இந்த நிலை என்ற கேள்வி எழுகிறது. இதன் பின்னணி என்பது 60களில் தொடங்கியது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் 1962ஆம் ஆண்டு இந்தியா மீது சீனா போர் தொடுத்தது தான் தொடக்கப் புள்ளி. இதற்கு பதிலடி கொடுக்கும் இந்திய அரசின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்தது. ஆனால் சீனா கம்யூனிஸ்ட் நாடு என்பதால் அந்நாட்டை ஆதரிக்க வேண்டும் என்று கட்சிக்குள் சிலர் குரல் கொடுத்தனர்.
இரண்டாக உடைந்த கட்சி
இதனால் ஏற்பட்ட மோதல் போக்கு விஸ்வரூபம் எடுத்து 1964ல் கட்சி இரண்டாக உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னடைவாக மாறியது. பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையில் சாரு மஹும்தார் தலைமையிலான நக்சலைட் குழு, மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் என்ற பெயரில் புதிய கட்சி ஆகியவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை மேலும் பலவீனப்படுத்தியது.
அவசர நிலை பிரகடனம்
இது அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலித்தது. குறிப்பாக கேரளாவில் காங்கிரஸ் உடன் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்தது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அதன்பிறகு 1975ல் அறிவிக்கப்பட்ட அவசர நிலையின் போது முக்கிய கட்சியாக உருவெடுப்பதை இந்திய கம்யூனிஸ்ட் தவறவிட்டது. அப்போது அவசர நிலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தது நாட்டையே அதிரவைத்தது. அதேசமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. நெருக்கடி நிலைக்கு பின்னர் கம்யூனிஸ்ட்கள் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் வரலாறே மாறியிருக்கும்.
பாஜகவின் எழுச்சி
பிளவுபட்டு கிடந்த கம்யூனிஸ்ட்கள், வெவ்வேறு நிலைப்பாடு போன்ற காரணங்களால் நல்ல வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பிறகு காங்கிரஸின் சரிவை ஜனதா கட்சி பயன்படுத்தி வளரத் தொடங்கியது. பின்னர் பாஜக தேசிய அளவில் வளர ஆரம்பித்ததும் அரசியல் சூழல் மாறியது. இவர்கள் தங்களுடைய கட்சியின் கட்டமைப்பை மிகப்பெரிய அளவில் வளர்த்தெடுத்து தற்போது மத்தியில் ஆளுங்கட்சியாக தொடர்ந்து இரண்டாவது முறை அமர்ந்துள்ளனர்.
மீண்டும் ஒரு சான்ஸ்
கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாதது, கொள்கை பிடிப்பை இறுக்கமாக பின்தொடர்வது, காலத்திற்கேற்ப தகவமைத்து கொள்ளாதது, தேசிய அளவில் அணி திரட்டுவதில் பின்னடைவு போன்ற விஷயங்களால் கம்யூனிஸ்ட்கள் கரைந்து கொண்டே செல்கிறார்கள். குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் கம்யூனிஸ்ட்களை பாஜக தன் வசம் இழுத்துவிட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 2024 மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போதே விழித்து கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.