சென்னை:
16வது ஐபிஎல் சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே சென்று அமர்ந்து பார்க்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய போட்டிகளை உதாரணமாக சொல்லலாம். இரு போட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே நிலை தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தான் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான 17ஆவது போட்டி நடைபெறுகிறது.
இந்த சூழலில் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதே சூழல்தான் சென்னை – லக்னோ இடையிலான போட்டிக்கும் இருந்தது.ஆன்லைன் டிக்கெட்டும் விற்று தீர்ந்த நிலையில், 750 ரூபாய் கொண்ட டிக்கெட்டை சமூக வலைதளம் மூலமாக பலரும் ரூ.5000க்கு கள்ளச் சந்தையில் விற்கின்றனர். சில நேரங்களில் ரூ.6000 வரையிலும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக சென்னையில் நடந்த போட்டியின் போது டிக்கெட்டை பிளாக்கில் விற்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தான் நாளை அடுத்த போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கும் கள்ளச் சந்தை விற்பனை படு ஜோராக நடந்து வருவதாக கூறப்படுகிறது
டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் இரவு முழுவதும் காத்திருந்தாலும் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுவதாக தெரிகிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். டிக்கெட் கிடைக்காத விரக்தியால் பல கருத்துகளை ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
டிக்கெட்டுகள் அனைத்தும் கார்ப்பரேட், ஸ்பான்சர்கள், பிரபலங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பவர்கள் ஆகியோருக்கு செல்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மொத்தத்தில் மைதானத்தின் இருக்கைகளில் 40 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.