தந்தை இறந்த துயரத்திலும் 10-ம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாணவி; பள்ளி வளாகத்தில் நெகிழ்ச்சி!

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி வரும் மாணவியின் தந்தை திடீரென உயிரிழக்க, அந்த துயரச் சூழலிலும் தேர்வை எழுத மாணவி பள்ளிக்கு வந்த நெகிழ்ச்சி சம்பவம், பலரையும் கலங்க வைத்தது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்துள்ள சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

தேர்வு

இதில் கடைசி மகள் வினிதா அம்பகரத்தூரில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்து வருகிறார். புதுச்சேரியில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஆங்கில மொழித் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, மாணவி வினிதாவின் தந்தை விஜயகுமார் திடீரென மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை 3 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த வினிதா தந்தை உயிரிழந்த துயரத்தில் கதறி அழுதார். இருந்தபோதிலும் மனம் தளராமல்,நேற்று 10-ம் வகுப்பு ஆங்கில மொழித்தேர்வை எழுத முடிவு செய்தார்.

தேர்வு

தந்தை உயிரிழந்த சோகத்திலும் பள்ளிக்குத் தேர்வு எழுத வந்த மாணவி அழுவதைக் கண்டு பள்ளி ஆசிரியர்கள் அவரைக் கட்டி அணைத்து ஆறுதல் கூறி தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவி வினிதா தேர்வு முடிந்த கையோடு தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.

தந்தை உயிரிழந்த சோகத்திலும் 10-ம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாணவிக்குப் பலரும் ஆறுதல் கூறி ஊக்கப்படுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.