சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 386 ஆக இருந்த நிலையில் இன்று 401 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் இன்றும் கொரோனா தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில், இன்று கொரோனா பாதிப்பு 401 ஆக உயர்ந்துள்ளது. 215 ஆண்கள், 186 பெண்கள் என மொத்தம் 401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 பேரும், கோவையில் 41 பேரும், சேலம் 23 பேரும், கன்னியாகுமரி 22 பேரும் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்புக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 38,052- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 198 ஆகும். கொரோனா பாதிப்பைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4,727 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை. நேற்று செங்கல்பட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
கொரோனா பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டியது இல்லை என்றும், கொரோனா பாதிப்புகள் எந்தவகையில் ஏற்பட்டாலும் பாதிப்புகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இன்று தமிழகசட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது பற்றி கூறுகையில், “தற்போதைய பாதிப்பு தனிநபர்களுக்கே பதிவாகி வருகிறது, குழு பாதிப்பு என்பது இதுவரை பதிவாகவில்லை. ஆகவே, பொது இடங்களில் முகககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
இணை நோய் உள்ளவர்கள் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டியது இல்லை. கொரோனா பாதிப்புகள் எந்தவகையில் ஏற்பட்டாலும் மருத்துவ கட்டமைப்புகள் தயார்நிலையில் வைத்து, பாதிப்புகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.