தேனியில் சோழமண்டலம் ஃபைனான்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இங்கு கடந்த ஆண்டு கெளமாரியம்மன் டிராக்டர்ஸ் நிறுவனம் மூலம், 8 நபர்களுக்கு மொத்தம் 53,34,485 ரூபாய்க்கு கடன் உதவி அளிக்கப்பட்டது. ஆனால், கடன் பெற்றவர்கள் யாரும் தவணைத் தொகையைச் செலுத்தவில்லை. இது குறித்து விசாரித்தபோது, டிராக்டர் நிறுவனத்தினர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாரிடம் புகாரளிக்கப்பட்டு, ஆறு பேர்மீது வழக்கு பதிவுசெய்து, ஆறு டிராக்டர்களை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் `கெளமாரியம்மன் டிராக்டர்ஸ்’ என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இங்கு கடந்தாண்டு கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சரவணன், ஆரோக்கியம், சுருளியப்பன், நாகேந்திரன், அன்புதுரை, குமார், போடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த செந்தில் குமார், மணிகண்டன் ஆகியோரின் பெயரில் தலா ஒரு டிராக்டர் வீதம் எட்டு டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்காக தேனியிலுள்ள சோழமண்டலம் ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தின் மூலம் எட்டு பேருக்கும் மொத்தத்தில், 53,34,485 ரூபாய்க்கு கடன் உதவி வழங்கப்பட்டு, அந்தத் தொகை சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட எட்டு நபர்களின் கணக்கிலிருந்து முதல் தவணை மட்டும் நிதி நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல மாதங்களாக தவணைத் தொகை செலுத்தாமல் நிலுவையில் இருந்திருக்கிறது.
இதன் காரணமாக நிலுவையிலுள்ள மாதத் தவணைத் தொகையைச் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட நபர்களிடம் நிதி நிறுவனத்தினர் கேட்டிருக்கின்றனர். அப்போது, சம்பந்தப்பட்டவர்கள் டிராக்டர்களைத் தாங்கள் யாரும் வாங்கவில்லை எனவும், மத்திய அரசு திட்டத்தின்கீழ் ரூபாய் 10,000 முதல் 15,000 வரை நிதியுதவி செய்து தருவதாகக் கூறி, ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை, டிராக்டர் விற்பனை நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் பாலமுருகன், விற்பனையாளர் மதன் ஆகியோர் பெற்றுச் சென்றனர் எனவும் கூறியிருக்கின்றனர்.
மோசடியில் ஈடுபட்ட விற்பனை நிறுவனத்தினரிடம் விளக்கம் கேட்டதற்கு, சரிவர பதில் அளிக்காமல் அவர்களை மிரட்டியிருக்கின்றனர். இதற்கிடையே குமார், நாகேந்திரன், அன்புதுரை ஆகியோர் பெயரில் விற்பனையாகிப் பதிவுசெய்யப்பட்ட மூன்று டிராக்டர்களை நிதி நிறுவனத்தினர் கையகப்படுத்தியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, மணிகண்டனின் பெயரில் இருந்த டிராக்டரை கையகப்படுத்தியதில், அதன் இன்ஜின், சேசிஸ் எண்களை வேறொரு வாகனத்துக்கு மாற்றியிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக நிதி நிறுவனத்தின் சார்பில் தேனி கிளை மேலாளர் வெயில் மாணிக்கம் அளித்தப் புகாரின்பேரில், டிராக்டர் விற்பனை நிறுவன உரிமையாளர்களான பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சந்திரமோகன், நிலக்கோட்டையைச் சேர்ந்த கார்த்தி, போடியைச் சேர்ந்த சரண்யா, சதீஸ்குமார், மேலாளரான கம்பம் பாலமுருகன், விற்பனை பிரதிநிதியான நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த மதன் ஆகிய ஆறு பேர்மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ராஜாங்கம் என்பவரைக் கைதுசெய்து, அவர் மூலமாக ஆறு டிராக்டர்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.