டாகா, ”நாட்டில் உணவுப் பற்றாக்குறை உள்ளதாக பொய் செய்தியை வெளியிட்டு, நம் நாட்டின் எதிரியாக செயல்படுகிறது,” என, பிரபல பத்திரிகைக்கு எதிராக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆக்ரோஷமாக குறிப்பிட்டார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வெளியாகும், பிரபல வங்க மொழி பத்திரிகை, ‘புரோதம் அலோ’ சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது.
ஏழு வயது சிறுவன் ஒருவன், நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக கூறுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று, அவாமி லீக் தலைவரும் பிரதமருமான ஷேக் ஹசீனா பேசியதாவது:
ஒரு காலத்தில் ஊழல்கள் குறித்து செய்தி வெளியிட்டு வந்த பிரபல பத்திரிகை, தற்போது அந்த ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
நம் நாட்டில் உணவுப் பற்றாக்குறை உள்ளதாக ஒரு பொய் செய்தியை வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக அவாமி லீக், ஜனநாயகம் மற்றும் இந்த நாட்டு மக்களுக்கு எதிரியாக அந்த பத்திரிகை செயல்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement