செயற்கை நுண்ணறிவு குறித்த பேச்சு உலக அளவில் வைரலாக உள்ளது. பெரும்பாலான இணைய பயனர்கள் அதன் சாதகங்கள் குறித்து பேசி வருகின்றனர். இருந்தும் சிலர் அதில் உள்ள பாதகங்கள் குறித்தும் அண்மைய நாட்களாக பேசி வருகின்றனர். அந்த வகையில் ஏஐ மாடல்கள் இணைய பயனர்கள் பொதுவாக பயன்படுத்தி வரும் எளிய பாஸ்வேர்டுகளை நொடிகளில் கிராக் (கண்டறிவது) செய்வதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான வலைதளங்கள் தங்கள் பயனர்களிடம் வலுவான பாஸ்வேர்டுகளை உள்ளிடும் டி தெரிவிப்பது வழக்கம். ஆங்கில எழுத்துகள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டரை பயன்படுத்துமாறு அந்த தளங்கள் தெரிவிக்கும். ஏனெனில் பயனர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு வேண்டி இது சொல்லப்படுகிறது.
ஆனாலும் சில பயனர்கள் எளிதான மற்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவர். இது பொதுவான பாஸ்வேர்டுகளில் அடங்கும். அப்படி பயன்படுத்தும் பாஸ்வேர்ட்களை ரேண்டமாக பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பயனர்களின் தரவுகளை ஹேக்கர்கள் தட்டித் தூக்க வாய்ப்புகள் அதிகம். அதே வழியில் தற்போது ஏஐ-யும் பாஸ்வேர்டுகளை கிராக் செய்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ‘123456, password, abcdefg, பெயர், பிறந்த தேதி’ என எளிய பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
‘ஹோம் செக்யூரிட்டி ஹீரோஸ்’ மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக PassGAN எனும் ஏஐ பாஸ்வேர்ட் கிரேக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டுகளை அடையாளம் காண இந்த ஆய்வில் முயற்சி செய்யப்பட்டுள்ளது. அதில் பொதுவான பாஸ்வேர்ட்களை பயன்படுத்தி வரும் 51 சதவீத பயனர்களின் பாஸ்வேர்டை நொடிகளில் கண்டறிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மிக நீளமான பாஸ்வேர்ட்களுக்கு சிக்கல் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பது எப்படி? – மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாஸ்வேர்டை மாற்றுவது, அப்பர் மற்றும் லோயர் கேஸ் ஆங்கில எழுத்துகள், எண்கள், ஸ்பெஷல் கேரக்டர்களை பயன்படுத்துவது. பாஸ்வேர்டு என்ன என்பதை மறக்கும் நபர்கள் பாஸ்வேர்டு மேனேஜ்மென்ட் முறையில் இதை நிர்வகிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.