லண்டன்,பிரிட்டனில், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் வளர்ப்பு நாய்க்கு, கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பிளைமவுத் என்ற கடற்கரை நகரம் உள்ளது. இங்கு, கோகோ என பெயரிடப்பட்ட 2 வயதான லேப்ரடார் வகை நாயை ஒருவர் வளர்த்து வந்தார். இவருக்கு தினமும் இரவில் மது அருந்தும் பழக்கம் இருந்தது.
அவர் மது அருந்திவிட்டு கோப்பையில் மிச்சம் வைத்துவிட்டு துாங்க செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் துாங்க சென்றதும், அவரது செல்ல நாய் கோகோ மீதமுள்ள மதுவை குடித்து வந்தது. இது நீண்ட காலமாக தொடர்ந்தது.
திடீரென நாயை வளர்த்து வந்த நபர் உயிரிழந்தார். கவனிக்க ஆளின்றி இருந்த கோகோவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த விலங்குகள் நல வாரியம் கோகோவை எடுத்து சென்று சிகிச்சை அளித்தது.
அப்போது தான், கோகோ மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது. நீண்ட காலம் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி திடீரென மது கிடைக்காமல் போனதால், நாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
பொதுவாக மனிதர்களுக்கு மட்டுமே ஏற்படும் இதுபோன்ற பாதிப்பு, நாய்க்கு ஏற்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என, டாக்டர்கள் தெரிவித்தனர். கோகோவை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோகோ தற்போது மெல்ல உடல்நலம் தேறி வருவதாகவும், முழுதாக குணம் அடைந்ததும், அதை தத்து கொடுக்க உள்ளதாகவும் விலங்குகள் நல வாரியத்தினர் தெரிவித்தனர்.
Advertisement