மீண்டும் கொதிக்கும் ராஜஸ்தான் அரசியல் களம்.. உச்சக்கட்டத்தில் மோதல்.. பைலட் vs கெலாட்.. அடுத்து என்ன..?

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடக்கும் அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பது காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையேயான அதிகாரப் போட்டியால் காங்கிரஸ் ஆட்சியே கவிழும் சூழல் ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளுங்கட்சி இரண்டாக பிரிந்து கிடக்கிறது. ஒருபிரிவு, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கீழும், இன்னொரு பிரிவு சச்சின் பைலட்டுக்கு கீழும் செயல்பட்டு வருகின்றன. இதுதான் அங்கு அவ்வப்போது பெரும் பிரச்னையாக மாறி வருகிறது.

நீண்டகாலமாக ராஜஸ்தானில் காங்கிரஸ் முகமாக இருந்து வரும் அசோக் கெலாட்டுக்கு மாற்றாக, தான் வர வேண்டும் என்பது சச்சின் பைலட்டின் ஆசையாக உள்ளது. ராகுல் காந்தி உடனான தனது நட்பை வைத்து, அங்கு அதிகாரத்தை அடைய பல முயற்சித்தார் சச்சின் பைலட்.

அனல் பறக்கும் அதிகார மோதல்

ஆனால், அசோக் கெலாட்டின் டீமில் இருக்கும் சீனியர் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் சச்சின் பைலட்டின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் தேர்தலில் உயிரை கொடுத்து வேலை செய்தார் சச்சின் பைலட். உண்மையில், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற சச்சின் பைலட்தான் முக்கிய காரணமாக இருந்தார். இதனால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என நம்பி இருந்த சச்சின் பைலட்டுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அசோக் கெலாட்டை அங்கு முதல்வராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

நாற்காலியை அசைத்த பைலட்

இதனால் ஒருகட்டத்தில் விரக்தியில் இருந்த சச்சின் பைலட், 2020-இல் காங்கிரஸ் மேலிடத்தையே அதிர வைத்தார். தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கெலாட் ஆட்சிக்கு எதிராக அதிரடியாக போர்க்கொடி தூக்கினார். அன்றைக்கு இருந்த நிலைமைக்கு, பாஜகவுடன் பைலட் கூட்டணி வைத்திருந்தால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஏற்கனவே மத்திய பிரதேசத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவை அலட்சியப்படுத்தி ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ், இம்முறை விழித்துக் கொண்டது. நேரடியாக சோனியாவும், ராகுலும் பைலட்டை அழைத்து பேசி அவரை சமாதானப்படுத்தினர்.

மீண்டும் போர்க்கொடி

அந்த சமயத்தில், விரைவில் முதல்வர் பதவியை வழங்குவதாக சச்சின் பைலட்டுக்கு சோனியா உறுதியளித்தார். ஆனால் இலவு காத்த கிளியாக பைலட் காத்திருந்ததுதான் மிச்சம். ம்ஹும்.. எதுவும் நடக்கவில்லை. அண்மையில் கூட அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு தேர்தல் நடந்த நிலையில், அசோக் கெலாட்டை கட்சிக்கு தலைவராக்கிவிட்டு, சச்சின் பைலட்டை முதல்வராக்கி விடலாம் என கணக்கு போட்டார் ராகுல் காந்தி. ஆனால், தனது முதல்வர் நாற்காலியை விட்டுக்கொடுக்க கெலாட் தயாராக இல்லை. இதுதான், தற்போது சச்சின் பைலட்டை மீண்டும் கிளர்ந்தெழ செய்துள்ளது.

மீண்டும் ஆடும் அஸ்திவாரம்

இந்த முறை அசோக் கெலாட்டுக்கு நெருக்கடியை கொடுக்க சச்சின் பைலட்டுக்கு தொக்காக மாட்டியுள்ளது ராஜஸ்தான் நிலக்கரிச் சுரங்க ஊழல். கடந்த பாஜக ஆட்சியில் ரூ.45,000 கோடி அளவில் நடந்த இந்த ஊழல் முறைகேடு தொடர்பாக இதுவரை முதல்வர் அசோக் கெலாட் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்..? என கேள்வி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளார் சச்சின் பைலட்.

ஆட்சி கவிழுமா..?

ஊழல் வழக்குகளில் பாஜகவுக்கு சாதகமாக அசோக் கெலாட் செயல்படுகிறார் என வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளார் சச்சின் பைலட். மேலும், அசோக் கெலாட்டை கண்டித்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரம்மாண்ட உண்ணாவிரதத்தையும் சச்சின் பைலட் தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே காங்கிரஸ் மேலிடத்தால் தான் ஏமாற்றப்பட்டதாக நம்பும் சச்சின் பைலட், இந்த முறை அதிகாரத்தை கைப்பற்றாமல் அடங்க மாட்டார் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பைலட்டிடம் அதிகாரத்தை கொடுத்து ஆட்சியை காங்கிரஸ் தக்க வைக்குமா அல்லது பறிகொடுக்குமா..? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.