முந்திரிக்காடு விமர்சனம்: சாதி ஒழிப்பும் காதல் திருமணமும்; ஆனால், படத்திலுள்ள அரசியல் போதாமைகள்?

தமிழக கிராமம் ஒன்றில் சாதி மறுப்பு காதல்/திருமணம் செய்பவர்களைக் கொலை செய்கிறது ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் குழு. அதை எவ்வித எதிர்ப்பும் இன்றி வரவேற்கிறது அக்கிராமத்திலுள்ள ஆதிக்க சமூகம். இந்நிலையில், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த தெய்வத்திற்கும், காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லாவிற்கும் நட்பு ஏற்படுகிறது.

முந்திரிக்காடு விமர்சனம்

இருவரும் காதலிப்பதாக ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் குழு கதைகட்டி, இருவரையும் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். ஒருகட்டத்தில் காதலாக மாறுகிறது அந்த நட்பு. இதனால் செல்லாவைக் கொலை செய்ய முடிவெடுக்கிறது அக்குழு. மறுபுறம், தெய்வத்தை ஆணவக் கொலை செய்ய அந்த ஊரே கூடி முடிவெடுக்கிறது. இறுதியில் காதலர்கள் தப்பித்தார்களா, அந்தக் கொலைகார குழுவிற்கு என்ன ஆனது, அந்தக் கிராமத்திற்கு என்ன ஆனது என்பதைப் பதைபதைக்கும் காட்சிகளாலும், பக்கம் பக்கமான வசனங்களாலும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம். எழுத்தாளர் இமையத்தின் ‘பெத்தவன்’ நெடுங்கதையை மூலக்கதையாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

கதாநாயகனான புகழ் மகேந்திரன் உயிர் பயத்தில் நடுங்கும் இடத்திலும், அதற்காகக் காதலை மறைக்கும் இடத்திலும் ஓரளவு சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். மற்ற இடங்களில், ஒரே மாதிரியான முகபாவத்தை வைத்தே ஒப்பேற்றியிருக்கிறார். அறிமுக நடிகரான சுபப்பிரியா மலர், தெய்வம் கதாபாத்திரத்தால் மொத்த படத்தையும் தன் தோளில் தாங்குகிறார். குறும்புத்தனம், வைராக்கியம், கோபம் என ஒரு கிராமத்துச் சுட்டி பெண்ணை கண்முன் நிறுத்துகிறார்.

முந்திரிக்காடு விமர்சனம்

இருவரையும் தவிர, தெய்வத்தின் தந்தையாக நடித்த ஜெயராவ்வும், காவல்துறை அதிகாரியாக சீமானும், ஊர் பாட்டியான காக்காச்சி என்கிற கதாபாத்திரமும் மனதில் நிற்கின்றன. வில்லன் குழுவில் ஏழெட்டு பேர் இருந்தாலும், அவர்களுக்கென்று தனித்துவமான அழுத்தமான காட்சிகள் இல்லாததால், அவர்களின் எந்தக் கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை.

கதை நடக்கும் கிராமத்துக்குப் பாதையாக இருக்கும் முந்திரிக்காட்டில் இருந்து கதை தொடங்குகிறது. அந்த முந்திரிக்காடும் படத்தின் முக்கிய பாத்திரமாக இருக்கிறது என்பதால், காதல், சண்டை, பாடல் காட்சிகள் என 90 சதவிகித காட்சிகள் அங்கேயே நடப்பது, ஒருவித அலுப்பைத் தருகிறது. செயற்கையாகவும் மிகை நடிப்பாகவும் வரும் வில்லன்கள் குழுவுக்கு மத்தியில், உயிர்ப்பான தெய்வம் கதாபாத்திரம் மட்டுமே ஆறுதல் தருகிறது.

வில்லன்களிடம் காதலர்கள் மாட்டுவது, அவர்கள் இருவரையும் மிரட்டுவது, அடிப்பது, உயிருக்குப் பயந்து ஓடுவது, சண்டை போடுவது என மீண்டும் மீண்டும் ஒரே பாணியிலான காட்சிகள், ஒரே மாதிரியான நடிப்பில் அதே லொக்கேஷனில் நடப்பது அயர்ச்சியை மட்டுமே உண்டாக்குகிறது. இப்படி ஒரு கிராமத்தின் கதையைப் பேசும் படத்தில், கிராமத்துக்கு உள்ளேயே போகாமல், ஊர் எல்லை ஒற்றையடிப் பாதையையும், முந்திரிக்காட்டையும், இரண்டு பஞ்சாயத்துக் காட்சிகளில் ஊர் மந்தையை மட்டுமே காட்டியிருப்பதால், அந்தக் கிராமம் குறித்த விவரங்கள் திரையில் கடத்தப்படவே இல்லை.

முந்திரிக்காடு விமர்சனம்

காவல்துறை அதிகாரியான சீமான் சில நையாண்டி கவுன்ட்டர்களால் சிரிப்பை வரவழைக்கிறார். ஆனால், அவர் வரும் காட்சிகளில் எல்லாம் கட்சி மேடை போல, பக்கம் பக்கமாக ‘தமிழ் – தமிழர் – தமிழ்க் குடி – தமிழ்க் குடி பெருமை’ எனப் பாடம் மட்டுமே எடுக்கிறார்.

“சாதி… சாதி… சாதி…” என எந்த நேரமும் எதாவது ஒரு கதாபாத்திரம் பேசிக்கொண்டே இருக்கிறது. சில காட்சிகளில், சமூகத்தை நோக்கிச் சரியான கேள்விகளைத் திரைப்படம் கேட்டாலும், பல இடங்களில் சாதி குறித்த அரசியல் போதாமையே வெளிப்படுகிறது.

உதாரணமாக, அக்கிராமத்தில் ஆதிக்க சாதியினரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் என்ன தொழில் செய்கிறார்கள், ஆதிக்க சமூகத்தினரிடம் இருக்கும் விளைநிலங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் என்னவாக வேலை பார்க்கிறார்கள், சாதி மறுப்பு காதல்/திருமணத்தால் அக்கிராமத்திலுள்ள ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சந்திக்கும் பாதிப்புகள் என்ன, சுயசாதி திருமணங்களை மறுத்து, சாதி மறுப்பு திருமணங்கள் செய்வதாலும், ஒடுக்கப்பட்டோர் நகரங்களுக்குப் புலம்பெயர்வதாலும், சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை மறுப்பதாலும், சாதியற்றவர்கள் என அரசு சான்றிதழை வாங்குவதாலும் சாதி ஒழிந்துவிடும் என்ற தவறான பார்வையை எந்த ஆதாரத்தின் பேரில் இயக்குநர் முன்வைக்கிறார் எனப் பல கேள்விகள் படம் நெடுகிலும் வருகின்றன.

முந்திரிக்காடு விமர்சனம்

இறுதிக்காட்சியில், காக்காச்சி பாட்டி எடுக்கும் அவதாரமும், தெய்வத்தின் தந்தையான ஜெயராவ்வின் நெகிழ்ச்சியான முடிவும் மட்டும் ஆச்சரியமூட்டுபவையாக இருக்கின்றன. அதேநேரம், நீளமான இறுதிக்காட்சி பார்வையாளர்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து போகிறது.

அக்கிராமத்தின் வெப்பத்தை தன் கேமராவால் ஓரளவுக்குக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.ஏ.சிவசுந்தரம். படத்தொகுப்பில் எல்.வி.கே தாசன் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். நீளமான இரண்டாம் பாதி, அதேபோல நீளமான, தேவையில்லாத காட்சிகளால் நிறைந்திருக்கிறது. பின்னணி இசையில் பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன். முதலில் வரும் காதல் பாடலைத் தவிர்த்து, மற்ற பாடல்கள் எல்லாம் சுமாராகவும், திணிக்கப்பட்டதாகவுமே இருக்கின்றன.

முந்திரிக்காடு விமர்சனம்

திரைக்கதையிலும், கதாபாத்திர வடிவமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி, ஒரு கிராமத்தில் சாதிய ஆதிக்கம் எந்தெந்த வடிவத்தில் எல்லாம் இருக்கின்றன என்பதை ஆழமாக பகுத்தாய்ந்து, அதைத் திரைக்கதையோட்டத்தில் இணைத்திருந்தால் சமகாலத்தின் ஒரு கவனிக்கத்தக்கப் படைப்பாக ‘முந்திரிக்காடு’ இருந்திருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.