சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்பு இயக்குநர் வெற்றிமாறன் உட்கார்ந்த விதத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், சினிமா விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன் அதற்கான காரணத்தை விளக்கி உள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி,கௌதம் மேனன், பாவனி ஸ்ரீ, சேத்தன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.
பாராட்டிய ரஜினி : விடுதலை படத்தை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருந்தார். மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில், விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு – பிரமிப்பு, இளையராஜா – இசையில் என்றும் ராஜா, வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை, தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
பம்மி உட்காரலாமா? : மேலும், படக்குழுவினரை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி டிராண்டானது. அந்த போட்டோவில் வெற்றிமாறன் ரஜினிக்கு மரியாதை கொடுக்கும் வகையில் பவ்யமாக அமர்ந்து இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலர் வெற்றிமாறன் பம்மி உட்காரலாமா என்றும், ரஜினிகாந்த் முன் வெற்றிமாறன் ஒரு அடிமைப்போல உட்காந்து இருந்தார் என்றும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தலைவர் என்று அழைக்காதீர்கள் : இந்நிலையில், சினிமா விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன் விளக்கம் அளித்துள்ளார். அதில், சில வாரங்களுக்கு முன்பு வெற்றிமாறன் ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். அந்த கருத்து அவர், நேரடியாக ரஜினிகாந்த் குறித்துத்தான் சொன்னார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதாவது, ரஜினியின் படங்கள் குறித்து அப்டேட் வரும் போது தலைவர் தலைவர் 170, தலைவர் 171 என்று கூறுகிறார்கள். அதேபோல பொது இடத்திலும் தலைவர் என்று தான் பலரும் பேசி வருகிறார்கள்.
சங்கோஜத்தால் : இதைக்குறிப்பிட்டுத்தான் வெற்றிமாறன் நடிகர்களை தலைவர் என்று அழைக்காதீர்கள் என்று கூறியிருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. இதன் பிறகு வெகு சில நாட்களிலேயே வெற்றிமாறன், ரஜினியை நேரடியாக சந்திக்கிறார். யாராக இருந்தாலும் இது போன்ற நேரத்தில் சங்கோஜம் இருக்கத்தான் செய்யும், அதைத்தான் வெற்றிமாறன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தேவையில்லாத விமர்சனம் : மேலும், ரஜினி கையை விரித்துவைத்துக் கொண்டு கம்பீரமாக அமர்ந்து இருந்தார், மற்றவர்கள் பம்மி உட்காந்து இருந்தார்கள் என்கிறார்கள். புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த நேரத்தில் என்ன விவாதம் நடந்துக் கொண்டு இருந்தது என்பதை பார்க்க வேண்டும். மேலும், வெற்றி மாறனை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும் அவர் எந்த வெற்றியை தலையில் தூக்கி வைத்துக்கொள்ள மாட்டார். மேலும், எந்த இடத்திலும் வெற்றிமாறன் திமிரை காட்டிக்கொண்டது இல்லை எப்போதும் அவர் எளிமையாகவே இருக்கக்கூடியவர் என்பதால், இதுபற்றி எழும் விமர்சனங்கள் தேவையில்லாதது என வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.