ஜெய்பூர்: ஊழக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், தனது சொந்த கட்சி அரசாங்கத்திற்கு எதிராக இன்று (ஏப்.11) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அவரது இந்த செயல் கட்சி விரோத நடவடிக்கையாக பார்க்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.
ராஜஸ்தானில் 2018-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. அதற்கு பக்கபலமாக இருந்தது சச்சின் பைலட் என்பதால் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சியில் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவியும், துணை முதல்வர் பதவி சச்சின் பைலட்டுக்கும் வழங்கப்பட்டது. இதனால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இதனிடையே கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இருந்து விலகுவதாக சச்சின் பைலட் பூகம்பத்தை கிளப்பினார். இதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பைலட்டை சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து சில காலம் அமைதியாக இருந்த சச்சின் பைலட் மீண்டும் பிரச்சினையை கிளப்பியுள்ளார். திங்கள் கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான முந்தைய பாஜக அரசின் ஊழல் தொடர்பாக கெலாட் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தோம். தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்கள்தான் உள்ளன.
ஏதோ சதி இருப்பதாக எதிரிகள் மாயையை பரப்பக்கூடும். எனவே இதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் இடையே வித்தியாசம் இல்லை என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வார்கள். எனது கோரிக்கையை வலியுறுத்தி, நான் ஜெய்ப்பூரில் ஷாகீத் ஸ்மாரக்கில் செவ்வாய்க்கிழை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறேன்’’என்று தெரிவித்திருந்தார்.
உண்ணாவிரதப்போராட்டம்: இந்த நிலையில், தான் அறிவித்தது போல, ஜெய்பூர் ஷாகீத் ஸ்மாரக்கில், மகாத்மா காந்தியின் படத்துடன் கூடிய பேனரின் பின்னணியில், தனது ஆதரவாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். வசுந்திரா ராஜேவின் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்பட்டாலும் சச்சின் பைலட்டின் நடவடிக்க்கை மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது. சச்சின் பைலட்டின் குற்றச்சாட்டுகளை கெலாட் அரசு மறுத்துள்ளது. மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த செயல் காங்கிரஸ் கட்சியை மிகவும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
கட்சி விரோத நடவடிக்கை: இதுகுறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தவா திங்கள் கிழமைக் கூறுகையில், “உண்ணாவிரதப் போராட்டம் குறித்து சச்சின் பைலட் இதற்கு முன்பு பேசவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அவர் என்னிடம் பேசியிருக்க வேண்டும். நான் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால், அவர் தனது குறையை வெளியே சொல்லியிருக்கலாம். பைலட்டின் இந்த செயல் தெளிவான கட்சி விரோத நடவடிக்கை. சந்தேகம் இல்லாமல் அவர் கட்சியின் மிகப்பெரிய சொத்து. நான் இன்னும் அவருடன் தொடர்பில் இருக்கிறேன். அதனால் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த அவருக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
“எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை நமக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இப்படி வெளியில் பேசக்கூடாது. அப்படியே ஏதாவது பிரச்சினை இருந்தால் முதல்வரைச் சந்தித்துச் சொல்லுங்கள்” என்று காங்கிரஸ் பிரமுகர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கடைசி முடிவு: சச்சின் பைலட்டின் இந்த உண்ணாவிரதம் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களுக்கு விடப்பட்டுள்ள சவால் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக தலைவருமான ராஜேந்திர ரத்தோர் கூறுகையில்,”சச்சின் பைலட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். அவரது இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதம், காங்கிரஸ் அரசின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்டிருக்கும் கடைசி ஆணி என்பதை தெளிவு படுத்துகிறது. நாடுமுழுவதும் காங்கிரஸ் தனது பலத்தை இழந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சச்சின் பைலட்டின் உண்ணாவிரத நோக்கம்? – மாநிலத்தின் துணை முதல்வராக இருந்து வந்த சச்சின் பைலட், கடந்த 2020-ம் ஆண்டு, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி துணைமுதல்வர், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். அதிலிருந்து முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையில் பனிப்போர் நடந்து வருகிறது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்ற போது அந்த பதவிக்கு கெலாட்டின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. கெலாட் பதவி விலகினால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என சச்சின் பைலட் எதிர்பார்த்தார். ஆனால் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்பதில் கெலாட் உறுதியாக இருந்தார். இந்நிலையில் கார்கே, தேசியத் தலைவர் பதவியில் அமர சச்சின் பைலட்டுக்கு மீண்டும் வாய்ப்பு பறிபோனது. ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தன்னை முதல்வர் வேட்பாளராக்க காங்கிரஸ் கட்சிக்கு சச்சின் பைலட் கொடுக்கும் அழுத்தமாகவே இது பார்க்கப்படுகிறது.