சென்னை: பொதுமக்களிடம் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்து சிக்கிய ஆரூத்ரா நிறுவன இயக்குநர் ஹரீஷ், பாஜகவில் பதவி பெறுவதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வழங்கியதாக கூறி விசாரணைக்கு ஆஜராகுமாறு அக்கட்சி நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.
தமிழ்நாடு பாஜக விளையாட்டுப் பிரிவு செயலாளராக இருந்தவர் ஹரீஷ். இவர், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் பொதுமக்களிடம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாக கூறி விளம்பரம் செய்தது.
தமிழ்நாடு பாஜக விளையாட்டுப் பிரிவு செயலாளராக இருந்த இதன் நிறுவனர் ஹரீஷ் கொடுத்த வாக்குறுதியை நம்பி, ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்து இருக்கின்றனர். இப்படி ரூ.2,438 கோடி பணத்தை பொதுமக்களிடம் ஆருத்ரா நிறுவனம் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்களிடம் பெற்ற பணத்தை ஆருத்ரா நிறுவனம் சொன்ன நேரத்தில் திருப்பி தரவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
போலீஸ் நடவடிக்கை: இதனை தொடர்ந்து ஆருத்ரா இயக்குநர்கள் 14 பேர் மீது ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து அந்த நிறுவனங்கிள் அதிரடி சோதனை நடைபெற்றது. ஏற்கனவே இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்த ஹரீஷை கைது செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ஹரீஷ் கைது: இந்த நிலையில் கடந்த மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஹரீஷை அதிரடியாக கைது செய்தனர். அவரோடு மாலதி என்ற ஆருத்ரா நிறுவன நிர்வாகியும் கைதானார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பாஜக முன்னாள் நிர்வாகி நடிகை காயத்ரி ரகுராம், “பொதுமக்களின் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா கோல்ட் மோசடியில் பாஜக அமர் பிரசாத் ரெட்டியின் வலது கரம் பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் ஹரீஷ் கைது. அண்ணாமலை முன்னாள் காவலராக இருந்து தமிழக மக்களை ஏமாற்றிய திருடனுக்கு உதவி செய்துள்ளார்.
பாஜக நிர்வாகிகளுக்கு லஞ்சம்: குறிப்பாக பெண்களின் பணம் மற்றும் தங்கம். பதவி கொடுத்து அவருக்கு பாதுகாப்பு கொடுத்தவரையும் கைது செய்ய வேண்டும். அண்ணாமலையின் சாதனை போலிமலை.” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், பாஜக விளையாட்டு பிரிவில் முக்கிய பொறுப்பை பெறுவதற்காக ஹரீஷ் நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்து உள்ளது. ஹரீஷுக்கு ரூ.130 கோடி பணம் தரப்பட்டு உள்ளதாக கூறியுள்ள போலீசார், இது தொடர்பாக பாஜக பிரமுகர் அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி சுதாகர் ஆகியோரை நேரில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.