சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக 6 கோடி ரூபாய் செலவில் 6 மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்று தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.11 ) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
- புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாதுறை, தென்காசி, ராணிபேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள்விளையாட்டரங்கங்களை உள்ளடக்கிய மாவட்ட விளையாட்டு வளாகங்கள் நிறுவப்படும்.
- முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் டாக்டர்.கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.42 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
- சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் குளம் ஆகிய 5 முக்கிய விளையாட்டரங்கங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும்.
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ELITE மற்றும் பன்னாட்டு அளவிலான பேட்டிகளில் பதக்கம் வெல்லும் MIMS ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும். இதன்படி ELITE திட்டத்தில் ஆண்டு நிதி உதவி ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், பயனாளிகளின் எண்ணிக்கை 12லிருந்து 25 ஆக உயர்த்தப்படும். MIMS திட்டத்தில் ஆண்டு நிதி உதவி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாகவும், பயனாளிகளின் எண்ணிக்கை 50லிருந்து 75 ஆக உயர்த்தப்படும்.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 27 விளையாட்டு விடுதிகள், 4 சிறப்பு நிலை விளைளாட்டு விடுதிகள், 6 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் 10 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும்.
- சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நவீனLED மின் விளக்கு வசதிகள் 9 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.
- 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில்பட்டியில் மாணவர்களுக்கான முதன்மை நிலை ஹாக்கி விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
- நாட்டிலேயே முதன்முறையாக 6 கோடி ரூபாய் செலவில் 6 மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
- சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்படும்.
மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து ‘TN சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ அமைப்பதற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- மாமல்லபுரத்தில் World Surfing League போட்டிகள் நடத்துவதற்கு 2 கோடியே 68 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டுகளுக்கான அகாடமி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
- தமிழகத்தின் விளையாட்டு மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான வழிகாட்டியாக செயல்பட விரிவான மற்றும் முழுமையான தமிழ்நாடு விளையாட்டுக் கொள்கை உருவாக்கப்படும்.