சென்னை : விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் சர்ச்சை இருக்கும் என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.
வெற்றிமாறனின் விடுதலைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31ந் தேதி வெளியானது.இதில், சூரி, விஜய்சேதுபதி,கௌதம் மேனன், சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்
இத்திரைப்படத்தை காண சாரை சாரையாக திரையரங்குக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். படம் நல்ல வசூலை அள்ளி வருகிறது.
ரங்கராஜ் பாண்டே :இந்நிலையில், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், திருமாவளவன், சீமான் போன்றோர் இப்படத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர். சமூக ஊடகங்களில் பெரும்பாலானோர் விடுதலை படத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், நான் இன்னும் இந்த படத்தை பார்க்காததால், விமர்சனங்களும் எதிர்ப்புகளும் ஏன் வருகிறது என்று தெரியவில்லை.
அசுரன் ஒரு பாடம்:ஆனால், வெற்றிமாறன் அவர்கள் ஒரு கதையை அழகாக சொல்லக்கூடியவர். நான் ஜெய்பீம் படத்தை விமர்சித்த போது, வெற்றிமாறனின் அசுரன் படத்தைத் தான் உதாரணமாக சொன்னேன். அசுரன் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கு, ஒரு பாடம் இருக்கு, சாதிய முரண்பாடு பற்றி தான் அந்த படம் பேசும். ஆனால், ரொம்ப நாகரீகமாக எல்லைத்தாண்டாமல் பேசி இருக்கும் அதுதான் முக்கியமான ஒன்று.
தாராளமாக அரசியல் பேசலாம்:திரைப்படங்களில் அரசியல் பேசக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை தாராளமாக அரசியல் பேசலாம். ஒரே ஒரு கிராமத்திலே, தண்ணீர் தண்ணீர் போன்ற படங்கள் ஒவ்வொரு விஷயத்தை பேசியது. அதேபோல அசுரன் படமும் ஒரு சித்தாந்தத்தை பேசியது. ஆனால், ரொம்ப நாகரீகமாக, யாரையும் திட்டாமல், புகழாமல் இருந்தது. வெற்றிமாறனுக்கு நன்றாக படம் பண்ணத் தெரியும். அவரின் விசாரணை படம் பார்த்து வியந்துவிட்டேன், ஒரு பொய் இல்லாமல் ரத்தமும் சதையுமா ஒருபடத்தை கொடுத்திருந்தார்.
விடுதலை 2ல் சர்ச்சை:நான் படம் பார்க்காததால், சில சினிமா நண்பர்களிடம் பேசினேன், அவர்கள் தற்போது வெளியாகி உள்ள முதல் பாகத்தில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை. ஆனால், விடுதலை இரண்டாம் பாகத்தில், சர்ச்சை இருக்கும் என்பதற்கான குறியீடு இதில் இருக்கு என்றார்கள். ஆனால், வெற்றிமாறன் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை விருதுகள் மூலம் மட்டுமில்லாமல், மக்களின் கை தட்டலின் மூலமும் அதை நிரூபித்துள்ளார்.
படைப்பாளிகளை கட்டுப்படுத்தக் கூடாது :தொடர்ந்து பேசிய ரங்கராஜ் பாண்டே, படைப்பாளிகளை நாம் கட்டுப்படுத்தக் கூடாது, இதை சொல்லு, இதை சொல்லாதே, ஏன் சொன்ன, ஏன் சொல்லக்கூடாது என்பதை கேட்கக்கூடாது. ஆனால், சொன்ன விஷயத்தில் தவறு இருந்தால் நிச்சயம் கேட்க வேண்டும். ஆனால், இது கற்பனைக்கதை என்பதால், கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம். எதற்காக இந்த பெயர் ஏன் வைக்கவில்லை என்று கேட்பது நியாயமில்லை என்றார்.