வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: தன்னோடு சண்டை போட்டு திட்டிய அம்மா குறித்து பாட்டியிடம் புகாரளிக்க, சீனாவைச் சேர்ந்த, 11 வயது சிறுவன், 130 கி.மீ., துாரத்துக்கு சைக்கிளில் சென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் ஜேஜியங்கைச் சேர்ந்த, 11 வயது சிறுவன், தாயுடன் சண்டை போட்டுள்ளான். இதையடுத்து, அவனுடைய தாய் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன் தாய் குறித்து பாட்டியிடம் புகார் அளிக்க முடிவு செய்தான். இதையடுத்து அவன் தன் வீட்டிலிருந்து 130 கி.மீ., துாரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சைக்கிளில் கிளம்பினான். சாலையில் உள்ள பெயர்ப் பலகைகளை பார்த்து, 24 மணி நேரம் பயணித்துள்ளான்.
வழியில், வீட்டில் இருந்து எடுத்து வந்த, பிரெட் மற்றும் தண்ணீரை குடித்து பசியாறியுள்ளான். பலமுறை வழி மாறி சென்றுள்ளான். இதனால், வழக்கமான தொலைவைவிட இரு மடங்கு அதிகம் அந்த சிறுவன் சைக்கிளில் சென்றுள்ளான். இதற்கிடையே மகனை காணாமல் அவனுடைய தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையில் மிகவும் சோர்வுடன் தனியாக இருந்த இந்தச் சிறுவனிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போதுதான், அவன் பாட்டி வீட்டுக்கு செல்வது தெரியவந்தது.
பாட்டி வீட்டுக்கு இன்னும் 1 மணி நேர பயணம் இருக்கும் நிலையில், அந்தச் சிறுவனை போலீசார், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அவனுடைய பெற்றோர் மற்றும் பாட்டிக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சிறுவனை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.
Advertisement