சிங்கப்பூர், தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், இந்திய முஸ்லிம்களுக்கு ரம்ஜான் நோன்பு திறப்புக்கான உணவு மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் ஜாபர் சாலிஹ், 36. இவரது மனைவி பாரா நதியா, 35. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாரா நதியா, இந்திய – மலாய் பெற்றோருக்கு பிறந்தவர். சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மலாய் மொழி பேசும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு ஜாபர் – நதியா தம்பதி, தங்கள் குழந்தைகளுடன் சமீபத்தில் சென்றனர். இங்கு, ராம்ஜான் நோன்பு திறப்புக்காக பேரிச்சம்பழம், உலர் திராட்சை, குளிர்பானங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் தாங்களாகவே சென்று அந்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்த ஜாபர், இந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஊழியர், ‘இது, இந்திய முஸ்லிம்களுக்கு இல்லை. மலாய்காரர்களுக்கு மட்டுமே’ என, ஜாப்பரிடம் கூறினார்.
இதன்பின் அங்கிருந்த வெளியேறிய ஜாபர், இந்த விஷயம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தன் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இந்த சம்பவம் எனக்கும், என் மனைவிக்கும் மிகுந்த மன உளைச்சலை அளித்துள்ளது. எதற்காக நமக்கு ரம்ஜான் உணவு தர மறுத்தனர் என, என் குழந்தை கேட்ட கேள்விக்கு, என்னால் பதில் அளிக்க தெரியவில்லை. அந்த ஊழியர் ஏதோ தவறு செய்து விட்டதாக கூறி சமாதானப்படுத்தினேன்.
இவ்வாறு அவர் அதில் எழுதியுள்ளார்.
இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, சம்பந்தபட்ட சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஜாபர், நதியா தம்பதிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.