எலியைக் கொன்றதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புடான் மாவட்டத்தை சேர்ந்த விக்கேந்திர ஷர்மா எனும் விலங்குகள் நல ஆர்வலர், மண் பானை தொழில் செய்து வரும் மனோஜ் குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், மனோஜ் குமார் தனது குழந்தைகள் முன் எலியை கழிவுநீர் வடிகாலில் மூழ்கடித்து துன்புறுத்தியுள்ளார் என்று குற்றம்சாட்டினார்.
காவல்துறை அதிகாரிகள் மனோஜ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். எலியின் உடல் பிரேத பரிசோதனைக்காக உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (IVRI) அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், எலி நீரில் மூழ்கி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மனோஜ் குமார் மறுத்துள்ளார். தனது குழந்தை எலியைக் கொன்று வடிகாலில் வீசியதாகவும், வடிகாலில் இருந்து எலியை வெளியே எடுத்த போது, வீடியோ எடுத்ததால் எலியைக் கொன்றது போன்ற தவறான தோற்றம் உருவாகியது என தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோ ஆதாரம் மற்றும் உள்ளூர்வாசிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரி குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். எலியைக் கொன்றதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in