பெங்களூரு: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் மல்லிகார்ஜுன கார்கே மூலம் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு டி.கே.சிவகுமார் ‘செக்’ வைத்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக பசவராஜ் பொம்மையும், மஜதவின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே உட்கட்சி மோதல் உருவாகியுள்ளது. சித்தராமையா போட்டியிடும் தொகுதியில் அவரை தோற்கடிக்க சதி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
2 தொகுதியில் போட்டி: இதனால் தன்னை 2 தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என சித்தராமையா மேலிடத்திடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், ‘‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. எனவே யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் மேலிடம் தான் பதிலளிக்க வேண்டும். தலித்ஒருவரை முதல்வராக்க வேண்டும்என்ற கோஷமும் முன் வைக்கப்படுகிறது.
அந்த வகையில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி அளிக்கப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் அவர் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர். எந்த பதவியையும் மனதில் வைத்து செயல்படாதவர்.
தற்போது தேசிய தலைவர் என்பதால் எனக்கும் அவர்தான் தலைவர். அவர் முதல்வராக பொறுப்பேற்றால் நான் அவருக்கு கீழ் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்றார். டி.கே.சிவகுமாரின் அறிவிப்பு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கேவை முன்வைத்திருப் பதன் மூலம், டி.கே.சிவகுமார் சித்தராமையாவுக்கு ‘செக்’ வைத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.