சென்னை: மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தேசிய அனல்மின் கழகம் ஆகியவற்றுக்கு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் வல்லூர், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன.
இந்த மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு தினமும் 7,192 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மின்நிலையங்களில் பழுது, பராமரிப்பு பணி உள்ளிட்டவை காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்படுவதால் தமிழகத்துக்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 5,500 மெகாவாட் வரை மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் மின்தேவையைப் பூர்த்தி செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 7,192 மெகாவாட் மின்சாரத்தை முழுவதுமாக வழங்குமாறு மத்திய மின்நிறுவனங்களிடம் தமிழ்நாடு மின்வாரியம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, தற்போது தினமும் 5,900 மெகாவாட் வரை மின்சாரம் வழங்கப்படுகிறது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் தற்போது தினசரி 17 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ள மின்தேவையைப் பூர்த்தி செய்வதில் மத்திய மின்சாரம் முதலிடத்திலும், மின்வாரியத்தின் சொந்த அனல் மின்சாரம் 2-வது இடத்திலும், தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள சூரியசக்தி மின்சாரம் 3-வது இடத்திலும் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.