இந்துார்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 15 வயது மாணவி, பி.ஏ., இறுதியாண்டு தேர்வு எழுதி சாதனை படைக்கவுள்ளார்.
ம.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் டனிஷ்கா சுஜித், 15. இவர், படிப்பில் அசாத்திய திறமை உடையவர். இதன் காரணமாக, 10ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்ததுமே, நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத தகுதி பெற்றார்.
தற்போது இவருக்கு, 15 வயதாகும் நிலையில், இந்துாரில் உள்ள தேவி அகில்யா பல்கலைக் கழகத்தில் பி.ஏ., உளவியல் பாடத்துக்கான மூன்றாம் ஆண்டு தேர்வை விரைவில் எழுத உள்ளார்.
இது குறித்து பல்கலை பேராசிரியை ரேகா ஆச்சார்யா கூறுகையில், ”நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால், 13 வயதிலேயே டனிஷ்காவை, சிறப்பு தகுதியின் அடிப்படையில் பி.ஏ., முதலாமாண்டு பட்டப்படிப்புக்கு சேர்த்துக் கொண்டோம். ”தற்போது அவர் இறுதியாண்டு தேர்வை எழுதஉள்ளார்,” என்றார்.
இது குறித்து மாணவி டனிஷ்கா கூறியதாவது: கடந்த, 2020ல் கொரோனா பாதிப்பு காரணமாக என் தந்தையும், தாத்தாவும் இறந்து விட்டனர். இதனால் எங்கள் குடும்பம் சிரமப்பட்டது. ஆனாலும் படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினேன்.
சமீபத்தில் பிரதமர் மோடி ம.பி.,க்கு வந்தபோது, அவரை சந்தித்தேன். அப்போது, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அவர் என்னை ஆசிர்வதித்ததுடன், ஆலோசனைகளையும் வழங்கினார்.
உச்ச நீதிமன்றத்துக்கு சென்று, வழக்கறிஞர்கள் வாதிடுவதை பார்த்தால், அதிக ஊக்கம் கிடைக்கும் என்றார். பிரதமரின் வார்த்தைகள் எனக்கு உத்வேகத்தை அளித்தன. இவ்வாறு அவர் கூறினார்.