ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக நேற்று மாலை இரு அணியினரும் பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியிருந்தனர். சென்னை அணியின் தரப்பில் ஜடேஜா பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்திருந்தார். அங்கு அவர் பேசியவற்றின் ஹைலைட்ஸ் இங்கே…
சென்னை அணியில் நிறைய வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தவர்…
“மொயீன் அலி நன்றாகத்தான் இருக்கிறார். ஒன்று அல்லது இரண்டு நாள்களில் முழுமையாக குணமடைந்து விடுவார். என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை ஆனால், பென் ஸ்டோக்ஸ் காயத்திலிருந்து மீள இன்னும் நான்கைந்து நாள்கள் ஆகலாம். தீபக் சஹாரை நான் சந்திக்கவில்லை. அவரின் காயம் குறித்தும் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. மஹீஸ் தீக்சனாவும் பதிரனாவும் நேற்றிரவுதான் சென்னை வந்து இறங்கியிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டிதான் சிஎஸ்கே கேப்டனாக தோனிக்கு 200வது போட்டி. இது சார்ந்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தவர்…
“சேப்பாக்கத்தில் தோனி நாளை ஆடப்போகும் ஆட்டம் சிஎஸ்கே அணியின் கேப்டனாக அவருக்கு 200வது ஆட்டம். சென்னை மட்டுமல்ல இந்தியாவே போற்றக்கூடிய ஜாம்பவான் அவர். சேப்பாக்கம் ரசிகர்களின் முன்னிலையில் அவரது மைல்கல் போட்டியில் வெற்றியைப் பரிசாக அளிப்போம்!” என்றார்.
மேலும் பேசிய அவர், “சேப்பாக்கம் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு உதவக்கூடியது. இங்கே பெரிதாக வேறெதுவும் முயற்சி செய்ய வேண்டிய தேவை இல்லை. சூழலை உணர்ந்து ஆட்டத்தின் இடையே சில மாற்றங்களைச் செய்து கொண்டால் போதும். தற்போதைய சூழலில் டி20 போட்டிகளில் எந்த ஸ்கோரையும் பாதுகாப்பான ஸ்கோர் என்று கூறவே முடியாது. மும்பை அணிக்கு எதிராக மும்பையில் வைத்து சிறப்பாகப் பந்துவீசியது பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அந்தப் புத்துணர்வுடன் நாளை நடைபெறும் ஆட்டத்திலும் சிறப்பாக செயல்படுவேன்.
கடந்த போட்டியில் இரண்டு அணிகளும் இங்கே 200 ரன்களைக் கடந்திருந்தோம். அது வழக்கமான சென்னை பிட்ச்சை போல இல்லை. அப்படித்தான் இந்த ஆட்டத்திற்கான பிட்ச்சும் இருக்கும் என நம்புகிறேன். இரு அணிகளின் ஸ்பின்னர்களுக்கிடையே ஒரு யுத்தமே நிகழக்கூடும். ஒரு பேட்டராக நான் எந்த வரிசையிலும் இறங்கத் தயாராக இருக்கிறேன். மூன்றே பந்துகளை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைத்தாலும் என்னுடைய சிறப்பான பங்களிப்பைக் கொடுக்க விரும்புகிறேன்” என்றார்.
`தோனிக்காக வெல்வோம்’ என ஜடேஜா சூளுரைத்திருக்கிறார். இன்று வெல்வார்களா? கமென்ட்டில் சொல்லுங்கள்.