சென்னை: Vijay Leo (விஜய்யின் லியோ) லியோ படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஏகப்பட்ட கண்டிஷன்ஸை போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களையுமே ஹிட் படங்களாக கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதில் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமின்றி கேஜிஎஃப், புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் என வேற்று மொழி படங்கள் தமிழ்நாட்டில் அதிகம் ஹிட்டான சூழலில் விக்ரமின் வெற்றி தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது.
விஜய்யுடன் லோகேஷ்: விஜய் கடைசியாக வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார். பைலிங்குவலாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனையடுத்து தனது கேரியரில் மெகா ஹிட்டுகளில் ஒன்றான மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருக்கிறார் விஜய். இவர்கள் இருவரும் இரண்டாவது முறை இணையும் படத்துக்கு ‘லியோ ப்ளடி ஸ்வீட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
லியோ ப்ரோமோ: விக்ரம் படம் போலவே இந்தப் படத்திற்கான டைட்டிலையும் ப்ரோமோவுடன் வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். காஷ்மீரில் சாக்லேட் ஃபேக்டரி வைத்திருக்கும் விஜய்யை தேடி ஒரு கும்பல் வருவதுபோல் அந்த ப்ரோமோவில் காட்சிகள் இருந்தன. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
காஷ்மீரில் முடிந்த ஷூட்டிங்: இப்போது சென்னையில்: இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சென்றது படக்குழு. அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் அங்கு முகாமிட்டிருந்த படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியது. இன்னும் 60 நாள்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பதாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
சென்னையில் ஷூட்டிங்: காஷ்மீரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னையில் ஒரு வாரமும், ஹைதராபாத்தில் க்ளைமேக்ஸையும் ஷெட்யூல் செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் காஷ்மீரில் படக்குழு பட்ட கஷ்டத்தை பார்த்த பிறகு அவுட்டோர் ஷூட்டிங்கே இனி வேண்டாம் எனவும், சென்னையில் செட் போட்டே படத்தை முடித்துவிடலாம் எனவும் விஜய் கூறியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சென்னையில் இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவருகிறது.
ஏகப்பட்ட கண்டிஷன்ஸ்: ஆனால் சென்னையில் நடக்கும் ஷூட்டிங்கில் விஜய் ஏகப்பட்ட கண்டிஷன்ஸை போட்டிருப்பதாக தகவல் ஒன்று உலாவுகிறது. அதாவது இரவு நேர காட்சிகளை பெரும்பாலும் குறைக்கும்படி கண்டிஷன் போடும் விஜய் அவுட்டோர் வேண்டவே வேண்டாம் என ஒற்றைக்காலில் நிற்கிறாராம். ஆனால் பெரும்பாலும் இரவு நேர காட்சிகளை படமாக்குவதில் விருப்பம் கொண்டவர் லோகேஷ் கனகராஜ். மேலும், சில காட்சிகளை அவுட்டோரில் படமாக்கவும், இரவு நேரத்தில் படமாக்கவும் அவர் திட்டமிட்டிருந்தாராம்.
ரசிகர்களின் பதிலடி: இப்போது விஜய் இப்படி கண்டிஷன்ஸ் போட்டிருப்பதால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் லோகேஷ். இப்படிப்பட்ட தகவல் வெளியானவுடன், இரவு நேரத்தில் படமாக்குவதுதான் லோகேஷுக்கு அதீத விருப்பம் உடையது. ஆனால் அதையே கூடாது என சொல்வதன் மூலம் இயக்குநரின் அடிவயிற்றிலேயே விஜய் கைவைத்துவிட்டாரா என சமூக வலைதளங்களில் சிலர் கூறிவருகின்றனர்.
அதேசமயம், விஜய் எப்போது இயக்குநரின் உரிமையில் தலையிடமாட்டார். எனவே இதுபோன்ற தகவல்களை வேண்டுமென்றே யாரோ கிளப்பிவிடுகிறார்கள் என விஜய் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துவருகின்றனர்.