‘இன்றிலிருந்து ஆறு மாதங்களுக்கு பின், சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து, ‘மொபைல் போன்’களிலும், ‘செல் பிராட்காஸ்ட்’ தொழில்நுட்பம் நிறுவப்பட்டு இருக்க வேண்டும்’ என, உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மொபைல் போன் களில், எஸ்.எம்.எஸ்., எனப்படும் குறுந்தகவல், எம்.எம்.எஸ்., எனப்படும், ‘மல்டிமீடியா’ தகவல் பரிமாற்ற வசதிகளை போலவே, ‘செல் பிராட்காஸ்ட் மெசேஜ்’ என்ற வசதி உள்ளது.
‘ஸ்மார்ட் போன்’கள் பயன்பாடு துவங்குவதற்கு முன் இருந்த சாதாரண போன்களில் இந்த தொழில்நுட்பம் இருந்தது.
‘வாட்ஸ் ஆப்’ போன்ற நவீன தகவல் தொடர்பு செயலிகள் பிரபலம் அடைந்ததும், இந்த தொழில்நுட்பம் மெல்ல காணாமல் போனது.
நம் போனில் இருந்து, மற்றொரு மொபைல் போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பும் வசதி எஸ்.எம்.எஸ்., என அழைக்கப்படுகிறது.
அதே போல, நம் மொபைல் போனில் இருந்து ஒரு குறிப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மொபைல் போன்களுக்கும் குறுந்தகவல் அனுப்பும் தொழில்நுட்பம், செல் பிராட்காஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
புயல் – வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், பயங்கரவாத தாக்குதல், ரயில், விமான விபத்துகள் போன்ற அவசர காலங்களில், ‘மொபைல் போன்’ சேவை துண்டிக்கப்படும் நிலையிலும், இந்த செல்பிராட்காஸ்ட் தொழில்நுட்பம் வாயிலாக தகவல் பரிமாறிக்கொள்ள முடியும்.
இந்த தொழில்நுட்பத்தை அனைத்து மொபைல் போன்களிலும் மீண்டும் நிறுவும்படி மொபைல் போன் உற்பத்தியாளர்கள் மற்றும் இயங்கு தள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இன்றிலிருந்து ஆறு மாதங்களுக்கு பின் சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும், செல் பிராட்காஸ்டிங் தொழில்நுட்பம் வாயிலாக அனைத்து இந்திய மொழிகளில் தகவல்களை பெறும் மற்றும் அனுப்பும் வசதி இடம் பெறவேண்டும். என, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய மொபைல் போன்களின், ‘சாப்ட்வேர்’ புதுப்பிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
– நமது சிறப்பு நிருபர் –