அவதூறு.. 2 ஆண்டு சிறை தண்டனை ரத்தாகுமா? ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

சூரத்: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை குஜராத் மாநிலம் சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் தனது தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அதன் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதனால் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனை ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தார். இந்தியா முழுவதும் அவர் தீவிர பிரசாரம் செய்தார். கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தபோது மோடி பெயர் தொடர்பாக சில கருத்துகளை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வங்கிக் கடன் மோசடியில் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி புகாரில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கிய லலித் மோடி ஆகியோரை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசினார். திருடர்கள் பெயர்கள் ஏன் மோடி என்று முடிகிறது? என கேள்வி எழுப்பியது தான் சர்ச்சைக்கு காரணமாகும்.

இதன்மூலம் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகத்தினரை இழிவுபடுத்திவிட்டதாகப் புகார்கள் எழுந்தன. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். குஜராத் மாநிலம் சூரத்மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த மாதம் 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் எச்எச் வர்மா தீர்ப்பளித்தார். அதோடு உடனடியாக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீனும் அளித்தது. அத்துடன், மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தண்டனையை தொடர்ந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வயநாடு தொகுதி எம்பி பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

2 year prison: Rahul Gandhi appeal case today hearing in surat sessions court

இந்நிலையில் தான் சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஏப்ரல் 3ல் மேல்முறையீடு செய்தார். 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக ஒன்றும், தீர்ப்பை ரத்து செய்வது தொடர்பாகவும் மனுக்கள் செய்யப்பட்டன. இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு ராகுலுக்கு ஜாமீன் வழங்கி விசாரணையை ஏப்ரல் 13க்கு ஒத்திவைத்தது.

அதன்படி இன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையின்போது ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனை ரத்தாகுமா? என காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே தண்டனையை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து புர்னேஷ் மோடி தரப்பில் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இதுவும் இன்று விசாரிக்கப்பட உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.