சென்னை: தமிழக பாஜகவில் மாநில பொருளாதார பிரிவு செயலாளராக இருந்த எம்.ஆர். கிருஷ்ண பிரபு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே எதற்காகப் பதவி விலகினேன் என்பதையும் அவரே விளக்கியுள்ளார்.
ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றியுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்தால் 20% முதல் 30% கூடுதல் வட்டி கிடைக்கும் என வாக்குறுதி அளித்துள்ளனர்.
இருப்பினும், பணத்தை வசூலித்துவிட்டு அவர்கள் அதுபோல எந்தவொரு முதலீட்டாளர்களுக்கும் பணத்தைத் தரவில்லை. ஆருத்ராவில் இணை இயக்குநராக இருந்த பாஜக நிர்வாகி ஹரீஷ் என்பவர் இதில் கைது செய்யப்பட்டார்.
பகீர் வாக்குமூலம்: இந்த வழக்கு விசாரணையில் பல பகீர் தகவல்கள் தெரிய வந்ததுள்ளது. அதாவது பாஜகவில் பதவி பெறுவதற்காகப் பல நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஹரீஷ் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இது பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், பாஜக நிர்வாகிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அதேபோல கட்சியில் இருந்து பலரும் வரிசையாக விலகியும் வருகின்றனர்.
அதன்படி பாஜகவில் பாஜக மாநில பொருளாதார பிரிவு செயலாளராக இருந்த எம்.ஆர். கிருஷ்ணபிரபு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஆருத்ரா காரணமாக இங்கே சமூகத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறார். கட்சியில் இருக்கும் சிலரும் அவர்களை ஆதரிக்கிறார்கள்.
உயிருக்கு ஆபத்து: நாங்கள் எதிர்பார்த்து வந்த பாஜக இது இல்லை. இன்று பாஜகவில் முழுக்க முழுக்க பணம் தான் விளையாடுகிறது. பணம் வாங்கிக் கொண்டு தான் பொறுப்பைக் கொடுக்கிறார்கள். சில நேரங்களில் பணம் வாங்கிக் கொண்டு நன்கு வேலை செய்து வருபவர்களையும் கூட நீக்கிவிடுகிறார்கள். தொண்டருக்கு எதிராகக் கட்சித் தலைவரே புகார் கொடுத்து கைது செய்ய வைக்கும் அளவுக்குத் தான் அங்கே நிலைமை இருக்கிறது. இனிமேல், இந்தக் கட்சியில் பயணித்தால் உயிருக்குத் தான் ஆபத்து.
யாரைச் சொல்கிறார்: எனது உயிருக்கு மட்டும் இல்லை. அனைவருக்கும் தான் ஆபத்து. கட்சியில் ஒருவர் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது. அனைவரும் நல்லவராக இருக்க வேண்டும். எனக்குத் தொடர்ச்சியாக மிரட்டல் கால்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் காரணமாகவே நான் கட்சியில் இருந்து விலகுகிறேன். இதில் அண்ணாமலையை மட்டும் நான் குறிப்பிடவில்லை. ஒட்டுமொத்தமாக மாநிலத் தலைமை பொறுப்பில் இருக்கும் அனைவரையுமே நான் குறிப்பிடுகின்றேன்.
பாஜகவில் இருந்தே எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது. கட்சியில் இருக்கும் பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா எனக்கு எதிராகப் போலியாகப் புகார் கொடுத்து, கைதாகக் காரணமாக இருந்தார். வேறு எந்தவொரு கட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காது. கட்சி என்பதைத் தாண்டி வேறு ஏதோ உள்ளே நடந்து கொண்டு இருக்கிறது. மாநிலத்திலேயே இதை யாரும் கவனிப்பதில்லை. அப்படியிருக்கும் போது தேசிய தலைமையிடம் யார் மூலம் இதைக் கொண்டு சென்று சேர்க்க முடியும்.
நடவடிக்கை இல்லை: மாவட்ட விவகாரங்களை மாநிலத்திற்குக் கொண்டு செல்வதிலேயே பிரச்சினை இருக்கிறது. இதில் எப்படி தேசிய தலைமையிடம் கொண்டு செல்வது. எனக்குத் தெரிந்து சுமார் 6 மாத காலமாக இந்தப் பிரச்சினை ஓடிக் கொண்டுள்ளது. நான் இது தொடர்பாகத் தனிப்பட்ட முறையில் அண்ணாமலை மற்றும் கேசவ விநாயகம் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளேன். அது அவர்களிடம் சென்று சேர்ந்ததை என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை.
அவர்களைச் சந்திக்க முயன்றாலும் முடிவதில்லை. இப்படியிருப்பவர்கள் முதல்வராகி மக்களை எப்படிச் சந்திப்பார்கள். ஆருத்ரா குறித்து இனிமேல் போசக் கூடாது. குடும்பமே அனாதை என்றெல்லாம் என்னை மிரட்டுகிறார்கள். கொலை மிரட்டலே கொடுக்கிறார்கள். கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவன் நான்.. அப்போது திமுக, அதிமுக வேட்பாளர்கள் கூட என்னை மிரட்டவில்லை. ஆனால், கட்சிக்குள் இருந்தே மிரட்டல் வருகிறது என்றால் இதை என்ன சொல்ல..
இதில் எனக்கு ஆதரவாக யாருமே வரவில்லை. என் மீது பொய் புகார் கொடுக்கப்பட்ட விவகாரத்தை நான் மாநிலத் தலைமையிடமும் கொண்டு போய்விட்டேன். ஆனால், அவர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவ்வளவு ஏன் விசாரிக்கக் கூட இல்லை. இனி மேலும் அவர்களிடம் மல்லுக்கட்டி நம்மால் அரசியல் செய்ய முடியாது என்பதாலேயே நான் கட்சியில் இருந்து விலகினேன்” என்று அவர் தெரிவித்தார்.
அதாவது பாஜகவின் கட்சிக்குள்ளே இருந்தே அவருக்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்,