சென்னை : திமுகவினரின் சொத்து பட்டியலை ஆதாரங்களுடன் நாளை காலை வெளியிடப்போவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டீசர் வெளியிட்டுள்ள நிலையில், அண்ணாமலை வெளியிடப்போகும் “DMKfiles.in” வெப்சைட்டில் இருக்கும் தகவல்கள் இவைதான் என திமுகவினர் சில படங்களை இப்போதே பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல் பாஜக தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டியிருந்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை போகிற போக்கில் பொய் புகார் சொல்லாமல், ஆதாரத்தோடு குற்றம்சாட்ட வேண்டும் என திமுக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, வாட்ச் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு, திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் என 27 பேரின் ஊழல் பட்டியல், சொத்து பட்டியல், தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார். தாம் வெளியிடும் தகவல்களை தமிழக மக்கள் திருவிழாவாக கொண்டாடுவார்கள், அந்த ஊழல் பட்டியல் தமிழ்நாட்டு அரசியலையே புரட்டிப்போடும் என்றும் அண்ணாமலை கூறி இருந்தார்.
அதன்படி நாளை ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடப்போவதற்கான டீசரை, திமுக ஃபைல்ஸ் என்கிற தலைப்போடு அண்ணாமலை இன்று ட்விட்டரில் வெளியிட்டார். இந்த வீடியோ அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், திமுக சார்பு சமூக வலைதள பக்கங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. அண்ணாமலை நாளை வெளியிடப்போகும் ‘dmk files’ இணையதளம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே வெப்சைட்டில் இருந்து முன்கூட்டியே சில தகவல்கள் லீக் ஆகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வெப்சைட்டில் இடம்பெற்றிருப்பதாக, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியல் என சில புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அவை ஆதாரங்கள் அற்றவை என்றும், யூகங்களாக பொதுவெளியில் புழங்கக்கூடியவை என்றும், அவற்றையே அண்ணாமலை நாளை வெளியிடப் போவதாகவும் திமுக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநிலத் அண்ணாமலை நாளை காலை வெளியிடப்போவது இந்த விவரங்கள் தானா அல்லது, இப்போது பகிரப்பட்டு வரும் இந்தத் தகவல் போலியானதா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்.