மெக்சிகோ: மெக்சிகோவில் போதைப் பொருள் குழுவுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். இதனிடையே அங்கு நடந்த ஒரு சம்பவம் போலீசாரை மிரள வைத்துள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் போதைப் பொருள் பயன்பாடும் கடத்தலும் அதிகமாகவே இருக்கும். அமெரிக்காவுக்குத் தேவையான போதைப் பொருட்கள் இங்கே இருந்தே கடத்தப்படுகிறது.
இதன் காரணமாகவே அமெரிக்கா – கனடா எல்லையைப் போல அமெரிக்கா- மெக்சிகோ எல்லை சாதாரணமாக இருக்காது. அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் சோதனை கெடுபிடிகள் அதிகமாகவே இருக்கும்.
மெக்சிகோ: இதனிடையே அங்கே போதைப்பொருள் கேங் வேற லெவலில் சம்பவம் செய்துள்ளது.. மெக்சிகோவில் பாதுகாப்புப் படையினருக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடப்பது ஒன்றும் புதிதல்ல.. ஆனால் அங்கே வழக்கத்திற்கு மாறாக ரெய்டு சம்பவத்தில் கடத்தல்காரர்கள் தங்கள் காரை நடுரோட்டில் கைவிட்டுச் சென்றுள்ளனர். இதில் விஷயம் என்னவென்றால் பின்னால் வங்கப் புலி ஒன்று கெத்தாக உட்கார்ந்து போலீசை மிரள வைத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை வடக்கு மெக்சிகோவில் உள்ள சினாலோவா என்ற பகுதியில் போதைப் பொருளைக் கடத்தி செல்லும் வாகனங்களை அங்கே இருக்கும் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.. அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற போதிலும், அதற்குப் பாதுகாப்புப் படையினர் வாய்ப்பளிக்கவில்லை. இதனால் அப்போது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு ஏற்பட்டுள்ளது.

கெத்தாக இருந்த புலி: ஒரு கட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் சரமாரி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.. இருப்பினும், போலீசார் நெருக்கமாக இருந்ததால் வாகனங்களில் இருந்த பொருட்களை அவர்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை.. துப்பாக்கிகள், வெடிமருந்துகளை அவர்கள் அங்கேயே போட்டுவிட்டுச் சென்றனர். அப்போது போலீசார் அருகே சென்று பார்த்த போது தான் மிரண்டு போனார்கள். ஏனென்றால் உள்ளே ஆயுதங்களுடன் பெரிய புலி ஒன்று உட்கார்ந்து கொண்டு இருக்கிறது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. துப்பாக்கி குண்டுகள் துளைத்திருக்கும் அந்த காரில் கெத்தாக அந்த புலி உட்கார்ந்து கொண்டிருக்கிறது. நல்வாய்ப்பாக இந்த துப்பாக்கிச் சூட்டில் புலிக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. உண்மையில், அங்கே சேஸிங், துப்பாக்கிச் சூடு எல்லாம் நடக்கும் போதும், அது அமைதியாகவே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.. இந்தச் சம்பவத்தை மெக்சிகோ செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
மிரண்டுபோன போலீசார்: அங்கே தேசிய காவல் படை மற்றும் மெக்சிகோ ராணுவம் ரோந்து பணிகளில் ஈடுபட்ட போது அவர்கள் 3 டிரக்குகளை கண்டறிந்துள்ளனர். அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே இருந்து துப்பாக்கிகள் மற்றும் புலி உள்ளிட்ட மூன்று வாகனங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து அங்கே இருந்த புலி குலியாகன் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கே இருந்து ஓஸ்டாக் விலங்குகள் காப்பகத்திற்கு அந்த புலி கொண்டு செல்லப்பட்டது.

அந்த புலிக்கு 11 முதல் 12 மாதங்கள் வயதான இளம் புலி என்றும் அது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த புலியின் உரிமையாளர் யார் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. புலி ஆக்ரோஷமாக இல்லை என்று அது ஏற்கனவே மனிதர்களுடன் பழக்கப்படுத்தப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேபோல போதைப்பொருள் கேங்கிற்கு சொந்தமான லாரியில் போலீசார் வங்காளப் புலிக்குட்டியைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த புலி விலங்குகள் சரணாலயத்தில் வைத்து வளர்க்கப்பட்டது. டியூக் என்று பெயரிடப்பட்ட அந்த குட்டிப் புலி, முதலில் தனது புதிய இருப்பிடத்தைப் பார்த்து மிரண்டு போனது.. அது தனது புதிய இருப்பிடத்திற்கு செட் ஆகவே கொஞ்ச நாட்கள் ஆகியுள்ளது.