வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காம்பாலா: ” கடந்த பல தசாப்தங்களாக, இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி வந்தவர்களுக்கு, தற்போது உள்ளது பதிலடி கொடுக்கும் வித்தியாசமான இந்தியா ” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
உகாண்டா சென்றுள்ள ஜெய்சங்கர், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசியதாவது: இன்றைய மக்கள், வேறு மாதிரியான இந்தியாவை பார்க்கின்றனர். காஷ்மீரின் உரி ஆக இருந்தாலும் பாலாகோட் ஆக இருந்தாலும் சரி, இந்தியா தனது தேச பாதுகாப்பு சவால்களை சந்தித்து வருகிறது.
கடந்த பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்த சக்திகள், அதனை இந்தியா சகித்து கொண்டதையும், தற்போது உள்ளது வேறு மாதிரியான இந்தியா என்பதையும், அது உரிய பதிலடி கொடுக்கும் என்பதையும் அறிந்து வைத்து உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில், ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ஏராளமான சீனர்கள் குவிக்கப்பட்டு உள்ளன. இன்று, பெரிய சவால்களுக்கு மத்தியிலும், பல உயர எல்லைகளிலும் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.கடந்த காலங்களை விட, இந்திய வீரர்கள் சந்திக்கும் சூழ்நிலை வேறுமாதிரியானது. தற்போது அவர்களுக்கு முழு ஆதரவும், சரியான உபகரணங்களும், உள்கட்டமைப்பும் உள்ளது.சீன எல்லையோரங்களில் இன்னும் அதிக பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இதனை கடந்த கால ஆட்சியாளர்கள் புறக்கணித்தனர்.
நாட்டின் நலனுக்காக உறுதியாக நிற்கும் புதிய இந்தியா தற்போது உள்ளது. இதனை உலகம் அங்கீகரித்து உள்ளது.இன்றைய இந்தியாவின் கொள்கைகளில் வெளியில் இருந்து வரும் அழுத்தங்கள் எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. தற்போது இன்னும் சுதந்திரமான நாடாக இந்தியா உள்ளது. எண்ணெய் எங்கு வாங்க வேண்டும். எங்கு வாங்கக்கூடாது என்ற எந்த நெருக்கடியையும் இந்தியா மீது சுமத்த முடியாது. இந்திய குடிமகன்கள் மற்றும் நுகர்வோரின் தேவைகளை நிறைவேற்றும் நாடாக இந்தியா தற்போது உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
Advertisement