வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: இந்தியாவின் அழகை ரசிக்க ஆட்டோவில் வலம் வரும் கனடா நாட்டு குடும்பத்தினர் நேற்று புதுச்சேரி வந்தனர்.
பன்முக கலாசாரமும், பண்பாடும் கொண்ட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பல்வேறு வெளிநாட்டினர் ஆர்வம் காட்டுகின்றனர். கனடா நாட்டைச் சேர்ந்த ஏல நிறுவனர் கிளிண்டன், தனது மகன் நிக்கோலஸ், மகள் லில்லியன் ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கொச்சி வந்தார்.
கேரளாவில் உள்ள ஆட்டோ ரிக் ஷா ரன் இந்தியா அமைப்பு, வெளிநாட்டினரை பல்வேறு மாநிலங்களுக்கு ஆட்டோவில் அனுப்பி, சுற்றிக் காண்பிக்கின்றனர்.
இதை அறிந்த கிளிண்டன் குடும்பத்தினர், ரூ. 1.25 லட்சம் செலுத்தி நவீன வை -பை, விளக்குகள் பொருத்தப்பட்ட ஆட்டோவை வாடகைக்கு எடுத்தனர்.
தந்தையும் மகனும் மாறி மாறி ஆட்டோ ஓட்டிக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டனர். கிளிண்டன் குடும்பத்தினர் நேற்று புதுச்சேரி வந்தனர். புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு கலாசாரம் மிக்க இடங்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கிளிண்டன் கூறுகையில், ‘இந்திய மக்கள் மென்மையாகவும், நட்பாகவும், அன்பாகவும் பழகுகின்றனர். இந்தியாவை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தோம். அதன்படி ஆட்டோ மூலம் இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்து வருகிறோம். இங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதிக்கத்தக்க கலாசாரம் உள்ளது.
இமாச்சலபிரதேசம் சென்று கொச்சி திரும்பி அங்கிருந்து நாடு திரும்புவோம். ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளுக்கு பயணம் செல்வது எங்கள் பழக்கம். இந்த ஆண்டு இந்தியாவில் எங்கள் ஆட்டோ பயணம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது’ என்றார்.
Advertisement