சென்னை: சட்டப்பேரவையில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், பட்டா வழங்குவது தொடர்பாக ஆர்.காமராஜ் (அதிமுக), க.அன்பழகன், தாயகம் கவி (திமுக) உள்ளிட்டோர் பேசினர்.
அதற்கு பதில் அளித்து துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: சாதி, வருமானம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. சான்றிதழ் வழங்க 15 நாள் அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, 4.65 லட்சம் சான்றிதழ் கோரும் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. தற்போது 785 மட்டுமே நிலுவையில் உள்ளன.
‘அரசு கிராம நத்தத்தில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வழிவகை உள்ளது. ஆனால், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்க முடியாது. இதுதொடர்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்களை அழைத்துப் பேச உள்ளோம். 48 ஆயிரம் நரிக்குறவர், இருளர் குடும்பத்தை கண்டறிந்துள்ளோம். அதில் 33,677 பேருக்கு பட்டா தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் வசிக்கும் காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கே பட்டா இல்லை. ‘‘என் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும்’’ என்று என்னிடம் கேட்டார். பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை. அங்கு 7 ஆயிரம் குடும்பங்கள் பட்டா இல்லாமல் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் முதல்வரிடம் இதுபற்றி கூறப்பட்டபோது, பெரும் தலைவர்களுக்கே எப்படி பட்டா வழங்காமல் விட்டுவிட்டனர் என்று முதல்வர் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்க உள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 6.35 லட்சம் பேருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.