பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலம்பள்ளம் கிராமத்தில் அமைந்திருக்கும் மலை மாரியம்மன் கோயில், அந்த கிராமத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பட்டியலின மக்களை இந்தக் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்கு மாற்றுச் சமூகத்தினர் அனுமதிப்பதில்லை எனச் சொல்லப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரச்னை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோயில் குடமுழுக்க நடந்த பிறகு மண்டகப்படி பூஜைக்கு பட்டியலின மக்களை அனுமதிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதையடுத்து இருதரப்பை அழைத்து அதிகாரிகள் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறி அதிகாரிகள் கோயிலை பூட்டி போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து பட்டியலின மக்கள் தரப்பில் பேசினோம். “எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 40 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். கிராமத்தினர் மலை மாரியம்மனுக்கு புதிய கோயில் கட்டினார்கள். ஊரிலுள்ள மாற்றுச் சாதியினர் எங்களை பழைய கோயிலுக்குள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள். இந்தத் தீண்டாமை கொடுமை பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
இந்த நிலையில், புதிய கோயிலில் எங்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கிராம முக்கியஸ்தர்களிடம் முறையிட்டோம். அதற்கு, `நீங்களும், நாங்களும் ஒண்ணா..?’ என்று கேட்டவர்கள், `உங்களைக் கோயிலுக்குள்ளவிட்டால் தீட்டு… வழக்கம்போல் வெளியில் நின்னு கும்பிட்டுவிட்டு போங்க, உள்ள விடமுடியாது’ என்றனர்.
இதையடுத்து நாங்கள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு கொடுத்தோம். பின்னர் 48 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் குடமுழுக்கில் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தோம். இந்த நிலையில், 48 நாள்கள் மண்டப்படிக்கான அபிஷேக பூஜை தினமும் நடந்தது. ஒரு நாள் மண்டகப்படி அபிஷேகத்துக்கு எங்களுக்கு அனுமதி கொடுங்கள் எனக் கேட்டோம்.
`நீங்கள் கோயிலுக்குள் வந்த தீட்டையே எப்படி கழிக்கப் போறோம் எனத் தெரியவில்லை… மண்டகப்படியெல்லாம் செய்ய விடமாட்டோம்’ என்றனர். நாங்க கோயிலுக்காக வரி வசூல் செய்து வச்சிருக்கோம். அந்தப் பணத்தை வாங்கி நீங்களே பூஜை செய்யுங்கனு சொன்னோம். அதற்கு, `உங்கப் பணம் எங்க சாமிக்கு தேவையில்லை’ என்றனர்.
இதையடுத்து நாங்கள் மண்டகப்படி நடத்த அனுமதி கேட்டு பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகரனிடம் முறையிட்டோம். அவர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஊர் கிராம கமிட்டி தலைவர் எங்களுக்கு மண்டப்படி தர முடியாதுனு சொல்லிவிட்டார். நேற்றுடன் 48 நாள்கள் பூஜை முடிந்துவிட்டது. எங்கள் வரிப்பணத்தையும் வாங்கவில்லை. பூஜை நடத்தவும் அனுமதிக்கவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தத் தீண்டாமை கொடுமை தொடரும் எனத் தெரியவில்லை” என்றனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “இரு தரப்பினரிடமும் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவிய நிலையில், சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பிருப்பதால் கோயிலைப் பூட்டிவிட்டோம். கோயிலைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறோம்” என்றனர்.