உ.பி.யின் "பாட்ஷா".. அடிக் அகமதுவின் மகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை.. குழந்தை போல அழுது புரண்ட காட்சி!

லக்னோ:
“உத்தரபிரதேசத்தின் பாட்ஷா” என அழைக்கப்படும் பயங்கர ரவுடியான அடிக் அகமதுவின் ஒரே மகனை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் அடிக் அகமது (52). உபியில் இவரது பெயரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ரவுடி சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 60-க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன.

தனது எதிரிகளை மிகவும் கொடூரமாக கொலை செய்வதுதான் அடிக் அகமதின் ‘ஸ்டைல்’. ரவுடியாக இருந்தபோதே, அரசியல் கட்சியைத் தொடங்கிய அடிக் அகமது, பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, மேற்கு அலகாபாத் தொகுதியில் நின்று எம்.பி.யாக அவர் வெற்றி பெற்றார்.

குலைநடுங்க வைத்த “எம்எல்ஏ கொலை”

இதனிடையே, கடந்த 2005-ம் ஆண்டு தனது சகோதரான அஷ்ரஃபை, எம்எல்ஏ தேர்தலில் அடிக் அகமது நிற்கச் செய்தார். தனக்கு பயந்துகொண்டு, தனது தம்பியை எதிர்த்து யாரும் தேர்தலில் நிற்க மாட்டார்கள் என அடிக் அகமது நினைத்தார். ஆனால், பகுஜன் சமாஜ் சார்பில் ராஜு பால் என்பவர் அதே தொகுதியில் போட்டியிட்டு அஷ்ரஃபை தோற்கடித்தார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அடிக் அகமது, எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ராஜு பாலை தானே இறங்கி நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். இந்தக் கொலை, உத்தரப்பிரதேசத்தையே குலைநடுங்கச் செய்தது.

ஜெயிலுக்கு தள்ளிய யோகி

எம்எல்ஏ கொலை வழக்கில் அடிக் அகமது, அவரது தம்பி அஷ்ரஃப் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், சமாஜ்வாதி ஆட்சி நடைபெற்றதால் அடிக் அகமது ஜாமீனில் சுதந்திரமாக வெளியே நடமாடி வந்தார். இந்நிலையில்தான், உபியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. இதையடுத்து,அடிக் அகமது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பல சொத்துகளை அரசு கைப்பற்றியது.

ஒரே சாட்சி கொலை

இதனிடையே, மற்ற வழக்குகளில் அடிக் அகமதுக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் இல்லாத நிலையில், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கில் மட்டும் உமேஷ் பால் என்ற வழக்கறிஞர் சாட்சியாக இருந்தார். எந்த மிரட்டல் உருட்டல்களுக்கும் அஞ்சாமல் இருந்த அவரை, கடந்த பிப்ரவரி மாதம் அடிக் அகமதின் ஆதரவாளர்கள் பட்டப்பகலில் சுட்டுக்கொன்றனர். இந்தக் கொலையை அரங்கேற்றியவர் அடிக் அகமதின் ஒரே மகனான ஆசாத் என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

என்கவுன்ட்டர்

இதையடுத்து, ஆசாத்தையும், அவரது கூட்டாளி குலாமையும் உபி போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவர்களை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என போலீஸார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் ஜான்சியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று மதியம் அங்கு போலீஸார் சென்ற போது, அவர்கள் மீது ஆசாத்தும், குலாமும் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதையடுத்து, போலீஸார் பதிலுக்கு சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குழந்தை போல அழுத தாதா

கொலை வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நீதிமன்றத்துக்கு இன்று அழைத்து வரப்பட்ட அடிக் அகமதுவிடம் இந்த விஷயம் கூறப்பட்டது. அவ்வளவு தான். ஒரு நிமிடம் தான் யார், எங்கு இருக்கிறோம் என்பதையே மறந்த தாதா அடிக் அகமது, சிறு குழந்தையை போல மண்ணில் புரண்டு அழத் தொடங்கினார். தனது மகனின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க அனுமதியுங்கள் போலீஸாரிடம் அவர் கெஞ்சி மன்றாடினார். இதனை பார்த்த போலீஸார், உத்தரபிரதேசத்தையே தன் கண் அசைவில் வைத்திருந்த அடிக் அகமதா இப்படி கதறி அழுவது என வியப்பில் ஆழ்ந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.