“எல்லோரும் எல்லா இடத்திலும் சமம் என்ற நிலையை உருவாக்குவதே சமூக நீதி” – கனிமொழி எம்.பி. பேச்சு

அருப்புக்கோட்டை: “சாதி வேற்றுமை ஒழிக்கப்பட வேண்டும். எல்லா இடங்களிலும் எல்லோருக்குமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்” என்று திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

விருதுநகர் மாவட்டம் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் அருப்புக்கோட்டையில் “மாபெரும் தமிழ் கனவு” என்ற தலைப்பில் ‘தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை” நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் 100 கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு விருதுநகர் மாவட்டத்தில் 3-வது நிகழ்ச்சியாக தற்போது இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது.
தமிழர்களுக்கு என்ற பெருமை வரலாறு முழுக்க இருந்து வருகிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மேலை நாடுகளுடன் வாணிபம் செய்யக் கூடியவர்களாக தமிழர்கள் திகழ்ந்தனர்.

சோழர் காலத்திலேயே குடவோலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல், பொருளாதாரம், அறிவியல் என அனைத்து துறைகளிலும் தமிழர்கள் தலை சிறந்தவர்களாகத் திகழ்ந்த வரலாறு உள்ளது. அதை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம்” என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நீதி என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. பேசுகையில், “சாதிப் பிரிவினைகள் இல்லாமல் அனைவரும் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என போராடியவர் பெரியார். அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. சாதிய பாகுபாடுகள் இன்றும் பல நாடுகளில் உள்ளன. நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் ஜனாதிபதியாகலாம் அமைச்சராகலாம். ஆனால் அவர்களுக்கு பின்னால் சாதி ஒட்டிக்கொண்டு வரும்.

சாதிய உணர்வு ஒழிய வேண்டும். சாதி வேற்றுமை ஒழிக்கப்பட வேண்டும். எல்லா இடங்களிலும் எல்லோருக்குமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். பெண்களுக்கு சொத்தில் பங்கு உரிமை கொடுக்கப்பட்டது. இது சமூக நீதிக்கான பயணம்தான். எல்லோரும் எல்லா இடத்திலும் சமம் என்ற நிலையை உருவாக்குவதுதான் சமூக நீதி” என கனிமொழி கூறினார்.

அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு கனிமொழி எம்.பி. பதில் அளித்தார். அப்போது, ஒரு குடும்பத்தில் தாத்தா படிப்பு அறிவு இல்லாமல் இருந்தார். தந்தை பள்ளி படிப்பை முடித்தார். தற்போது மகள் கல்லூரியில் படிக்கிறார். இது தான் சமூக நீதிக்கான வளர்ச்சி.ஆனால் சமூகத்தில் பெண்களுக்கான நீதி என்பது இன்றும் மோசமாகத்தான் உள்ளது.

சமூக ஊடகங்களையும் தொழில் நுட்பத்தையும் நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நான் கோயிலுக்கு சென்றதில்லை. ஆனாலும் கோயில்களில் விஐபி தரிசன முறை நிறுத்தப்பட வேண்டும் என்று பதில் அளித்தார். அவரைத் தொடர்ந்து “திசையும் திசைகாட்டியும்” என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கனிமொழி எம்.பி. சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிறைவில் எஸ்.பி.கே. கல்லூரி செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.