புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் கோவிட் தடுப்பூசி உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நிலவரப்படி நாட்டில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு 7,946 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த 223 நாட்களில் இல்லாத அளவுக்கு தற்போது ஒரே நாளில் பாதிப்பு 7,830ஆக நேற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிகரித்து வரும் கரோனா பரவலை கருத்தில் கொண்டு சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான உத்தரவை சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா நேற்று கூறிய தாவது: நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி உற்பத்தியை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
தற்போது கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி சுமார் 60 லட்சம் கையிருப்பில் உள்ளது. எனவே இளைஞர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
அடுத்த 90 நாட்களுக்குள் 60 லட்சம் முதல் 70 லட்சம் வரை கோவிஷீல்ட் தடுப்பூசியை இருப்பில் வைக்க திட்டமிடப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கடந்த 2021 டிசம்பர் மாதம் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
7,830 பேர் பாதிப்பு: இந்நிலையில் நேற்று நாட்டில் புதிதாக 7,830 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 7 மாதங்களில் மிக அதிக அளவாகும். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,830 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 223 நாட்களில் மிக அதிக அளவாகும். கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 5 பேர், டெல்லி, பஞ்சாப் மற்றும் இமாச்சலில் தலா இருவர், குஜராத், ஹரியாணா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். இதனால் நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,31,016 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 40,215 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4.47 கோடியாக (4,47,76,002) உள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4,42,04,771 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.72 சதவீதமாகவும் உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி பணியில் இதுவரை சுமார் 220.66 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.