ஜேடிஎஸ்-ஐ பதறவைத்த பாஜக… சிதறும் ஒக்கலிகா வாக்குகள்… கைநழுவும் குருபா!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மும்முனை போட்டிக்கான களம் தீவிரமாக தயாராகி வருகிறது. இம்மாநிலத்தில்
காங்கிரஸ்
கட்சிக்கு பரவலான வாக்கு வங்கி உள்ளது. லிங்காயத்து சமூக வாக்குகளை நம்பி பாஜகவும், ஒக்கலிகா சமூக வாக்குகளை நம்பி மதச்சார்பற்ற ஜனதா தளமும் களமிறங்குகின்றன. இதுதவிர பிற சமூக தலைவர்கள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பாஜக வியூகம்

பாஜகவை பொறுத்தவரை இரண்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஒன்று கடலோர பகுதிகளில் வாக்குகளை கவர தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இரண்டாவது லிங்காயத்து சமூக வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கைப்பற்றுவது. இவர்கள் 17 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளனர். லிங்காயத்து சமூகத்தின் முக்கிய தலைவராக எடியூரப்பாக திகழ்கிறார். இதனால் தான் இவருக்கு முதல்வர் நாற்காலி அளிக்கப்பட்டது.

பலம் வாய்ந்த எடியூரப்பா

இவரை மாற்ற வேண்டிய சூழல் வந்த போது, அதே லிங்காயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மையை களமிறக்கினர். தற்போது தேர்தல் அரசியலில் இருந்து எடியூரப்பா ஒதுங்கி கொண்டனர். இருப்பினும் அவரது மகன் பி.எஸ்.விஜயேந்திராவிற்கு ஷிகாரிபுரா தொகுதியில் சீட் கொடுத்து பாஜக கச்சிதமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க கடலோர பகுதி வாக்குகள் மற்றும் லிங்காயத்து ஆகிய இரண்டு விஷயங்கள் மட்டும் போதாது. எனவே தான் ஒக்கலிகா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.

ஒக்கலிகா செல்வாக்கு

விவசாய பெருங்குடி மக்களாக காணப்படும் ஒக்கலிகா சமூக மக்கள் 15 சதவீத வாக்கு வங்கியை பெற்றிருக்கின்றனர். வழக்கமாக ஒக்கலிகா வாக்குகள் என்பது மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு தான் போய் சேரும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது. இதனை மாற்றி காட்டும் வகையில் பாஜக வியூகம் வகுத்துள்ளது. நேற்று முன்தினம் வெளியிட்ட 189 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 41 பேர் ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்கள்.

ஓல்டு மைசூரு மண்டலம்

அதுவும் ஓல்டு மைசூரு மண்டலத்தில் குறி வைத்து காய் நகர்த்தியுள்ளது. மேலும் ஓபிசி, பழங்குடியின மக்கள் ஆகியோரின் வாக்குகளை பெறுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் குருபா சமூகத்தினரின் வாக்குகளை பெறுவதில் பாஜக கோட்டை விட்டு விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் முடிவுகள்

இதற்கான முன்னெடுப்புகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த சமூகத்தினர் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்பது அக்கட்சிக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே பாஜக எஞ்சிய சமூகத்தினரை வைத்து போட்டுள்ள திட்டம் பலனிக்குமா? என்பது வரும் மே 13ஆம் தேதி தெரிந்து விடும். கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 28 ஒக்கலிகா வேட்பாளர்களை பாஜக களமிறக்கியது.

ஆனால் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது. இது ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. அதேசமயம் 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. இந்த குறை 2023 சட்டமன்ற தேர்தலில் சரிசெய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.