சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தால், தொடர்ந்து நீதிமன்ற படியேறி வரும் ஓபிஎஸ், மக்கள் மன்றத்தை சந்திக்க முடிவு செய்துள்ளார். அதற்காக மிகப்பெரிய மாநாட்டை பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருப்பதால், திருச்சி முப்பெரும் விழா டெல்லி வரை கவனம் பெற்றிருக்கிறது.
டெல்லி வரை முக்கிய கவனம் பெற காரணம், சசிகலா இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவல் தான். டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர் செல்வம் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான அடித்தளமாக திருச்சி மாநாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் டெல்லி வரை எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருச்சியில் வரும் 24-ம் தேதி முப்பெரும் விழா நடத்தப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கடந்த வாரம் அறிவித்தார். மேலும், கட்சியிலிருந்து முன்பு நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி ஆகியோருக்கு உறுதியாக அழைப்பு விடுக்கப்படும் என்றார். சசிகலாவிற்கும் முறைப்படி அழைப்பு விடுப்பேன் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.
அதேபோல் சசிகலாவை போனில் தொடர்புகொண்டு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றே சொல்கிறார்கள்.
அதேபோல, சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க டெல்லி தலைமையிலிருந்து சிலரை ஓபிஎஸ் தரப்பினர் அழைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக ஓபிஎஸ் அணியின் 80-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களும், தங்கள் சார்பாகக் குறைந்தது 250 பேரை அழைத்து வரவேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். திருச்சி மாநாடு ஏற்பாட்டை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்துவருகிறார்கள்.
வழக்குகளில் தொடர் பின்னடைவு காரணமாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சோர்ந்து கிடக்கிறார்கள். எனவே திருச்சி மாநாடு நிகழ்ச்சி புதுத் தெம்பைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல, மிகப் பிரமாண்டமான கூட்டத்தை பன்னீர்செல்வம் கூட்டினால் எடப்பாடிக்குக் தலைவலியாகி விடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
எடப்பாடி பழனிச்சாமியை போல் தனக்கும் தமிழகம் முழுவதும் செல்வாக்கு அதிமுக தொண்டர்களிடையே உள்ளது என்பதை காட்டவும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பல தலைவர்களை தன் பக்கம் இழுக்கவும் ஓபிஎஸ் இந்த மாநாட்டை பயன்படுத்த கூடும் என்கிறார்கள். இந்த மாநாடு மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நெருக்கடி தர ஓபிஎஸ் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. டெல்லி மேலிடம் ஒருங்கிணைந்த அதிமுகவை விரும்புவதால் , தன் செல்வாக்கை நிரூபித்து பாஜகவின் நம்பிக்கையை பெற இந்த மாநாட்டை பயன்படுத்த ஓபிஎஸ் விரும்புகிறாராம்.