சென்னை : சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் இது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதமும். எழுதியுள்ளார். “இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை உணர்வோடு, கயிற்றை விட்டுப் பிடித்துள்ளார்” எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.
முதல்வர்களுக்கு கடிதம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக கடந்த 10ஆம் தேதி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி கடந்த 10ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல, ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் முடங்கிப் போயிருப்பதைச் சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பத்திரிகையாளர் மணி : இந்நிலையில், இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி கூறுகையில், “முதல்வர் ஸ்டாலின் நன்றாக அளந்து எச்சரிக்கை உணர்வுடன் காலடி வைத்துள்ளார். ஆளுநர் மேலும் மேலும் தவறுகளைச் செய்யவேண்டும் என்று கயிற்றை விட்டுப் பிடிக்கிறது திமுக அரசு. ஆளுநரின் நடவடிக்கைகள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி விமர்சித்தால் அது தவறு, ஆனால், ஆளுநர் அரசின் பொறுமையைச் சோதித்து வருகிறார்.
வேறு வழியில்லாமல் தான் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது திமுக. கேரளாவில் ஒரு அமைச்சர் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராகப் பேசிவிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவர் அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அந்த நிலைமை இங்கு வந்தால் சிக்கலாகிவிடும். ஆளுநர் முழுமையாக ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது. ஆளுநர் நினைத்தால் அரசுக்கு நிறைய தொல்லைகளை தர முடியும். ஆளுநர் தொல்லை கொடுத்தால், ஒரே வழி உச்ச நீதிமன்றம் தான். ஆனால், உச்ச நீதிமன்றத்திலும் எதிராக வந்தால் நிலைமை சிக்கலாகிவிடும்.
அலெர்ட்டாக இருக்கும் ஸ்டாலின் : இந்த சிக்கல்களை தவிர்க்கத்தான் ஸ்டாலின் எச்சரிக்கையாக இந்த விஷயத்தை கையாள்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசுக்கு இடைஞ்சல் கொடுத்ததால் எதிர்க்கட்சியாக இருந்த திமுக போராடியது. ஆனால், இன்று மோடியிடம் கட்டுண்டு கிடக்கும் அதிமுகவால் ஆளுநருக்கு எதிராக எந்த நகர்வையும் செய்ய முடியாது, அரசின் நடவடிக்கைகளையும் அவர்களால் ஆதரிக்க முடியாது. அவர்களது அரசியல் சூழல் இப்போது அப்படி இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடு தான் மாநில ஆளுநர்கள் அரசுகளுக்கு ஏற்படுத்தும் குடைச்சலுக்கு காரணம். அந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட நீண்ட காலம் எடுக்கும். ஆளுநர் மேலும் மேலும் தவறுகளைச் செய்யச் செய்ய, ஆளுநருக்கு எதிரான கருத்தோட்டம் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் உருவாக உருவாக, சில ஆண்டுகள் கழித்து இதில் சில ஜனநாயக நடைமுறைகள் வரலாம், ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்படலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.