சென்னை: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நாளை பல தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
கடந்த அண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய்யின் பீஸ்ட் மற்றும் யஷ்ஷின் கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை மிரட்டின.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டு என்றாலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் தான் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை பல ஆண்டுகள் பல வெற்றிப் படங்கள் மூலம் நிலைநாட்டி தியேட்டர் ஓனர்களையும் சினிமா உலகத்தையும் வாழ வைத்துள்ளது.
அருணாச்சலம்: தீபாவளிக்கும், பொங்கலுக்கும் தனது படங்களை ரிலீஸ் செய்து தியேட்டர்களை தெறிக்கவிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டையும் தனது லிஸ்ட்டில் ஆரம்பத்தில் இருந்தே சேர்த்துக் கொண்டார். பல படங்கள் முன்னதாக வெளியானாலும், 1997ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அருணாச்சலம் படம் வேறலெவல் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியது.
ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்யுறான் என 30 நாளில் 30 கோடி ரூபாயை செலவு செய்ய புது புது வழிகளை கண்டுபிடித்து ரஜினிகாந்த் செய்வதும், நகுமோ தேன் சுகமோ என செளந்தர்யா பாட்டி ஒருத்தன் என் வாயோட வாய் வச்சு கிஸ் அடிச்சிட்டான் என புலம்பும் காட்சிகள் எல்லாம் இன்னமும் டிவியில் அந்த படம் போட்டாலே டிஆர்பியை எகிற வைத்து விடும்.
படையப்பா: அருணாச்சலம் படத்தைத் தொடர்ந்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் 1999ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை டார்கெட் செய்தே வெளியாகி அடுத்த தரமான சம்பவத்தை பாக்ஸ் ஆபிஸில் செய்து சாதனை படைத்தது.
சிவாஜி, ரஜினிகாந்த், செளந்தர்யா, லக்ஷ்மி, மணிவண்ணன், அப்பாஸ், நாசர், பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்த படையப்பா திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆனதை சமீபத்தில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
சந்திரமுகியும் தமிழ் புத்தாண்டு ரிலீஸ் தான்: 2005ம் ஆண்டு ஷார்ப்பாக ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்றே வெளியான சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று தமிழ் புத்தாண்டுகள் கடந்து தியேட்டரில் ஓடி மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்தது.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு என நட்சத்திர பட்டாளமே நடித்த சந்திரமுகி திரைப்படத்தில் வேட்டையனாக வந்து வசூல் வேட்டையை நடத்தி சக்கரவர்த்தியாக ரஜினியை உட்கார வைத்தது ஒரு தமிழ் புத்தாண்டு தின ரிலீஸ் திரைப்படம்.
இந்த தமிழ் புத்தாண்டு ரிலீஸ்: ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 நாளை வெளியாகி இருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும். ஆனால், அதற்கு சற்றும் குறை வைக்காத அளவுக்கு அவர் நடிப்பில் உருவாகி உள்ள ருத்ரன் திரைப்படம் நாளை வெளியாகிறது. மேலும், சமந்தாவின் சாகுந்தலம், ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி, மாஸ்டர் மகேந்தரனின் ரிப்பப்பரி, விஜய் ஆண்டனியின் தமிழரசன் மற்றும் யோகி பாபுவின் யானை முகத்தான் என பல படங்கள் நாளை வெளியாகின்றன.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படம், சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளன.