சென்னை:
தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி என்றும், அதன் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக ஆளுநராக பதவியேற்றது முதலாகவே ஆர்.என். ரவிக்கும், தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. தமிழக அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பது, தமிழக அரசின் நடவடிக்கைகளை பொதுவெளியில் விமர்சிப்பது என இந்த மோதல் அதிகரித்து வந்தது.
அதுமட்டுமல்லாமல், திமுகவின் சித்தாந்த எதிரியான பாஜகவின் சனாதானக் கொள்கைகளை தூக்கிப்பிடித்தும் ஆளுநர் பேசி வந்தது தமிழக அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது.
நீயா நானா..?
இதனிடையே, தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என். ரவி. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் எந்த பதிலும் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார்.
சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநர்
இந்த சூழலில்தான், ஆளுநர் – திமுக அரசுக்கு இடையே நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. கடந்த வாரம் குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “அரசின் மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள்” எனக் கூறினார். ஆளுநரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை குறிப்பிட்டே ஆளுநர் இவ்வாறு பேசியதாக கருதப்பட்டது.
தனித்தீர்மானமும், ஒப்புதலும்..
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இந்த சூழலில், தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்தார்.
“இந்தியை திணிக்க முடியாது”
தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே, மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்களுடன் இன்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்து கொண்டார்.
அப்போது அவர், “இந்தி மொழியை விட தமிழ் மொழிதான் பழமையானது. தமிழை போல பழமையான ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே. எனவே, தமிழ் மொழி மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது” எனப் பேசினார். தற்போது அவரது பேச்சுதான் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.