நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கம்; நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிடவும்: அன்புமணி

சென்னை: கடலூர் மாவட்டம் கத்தாழை பகுதியில் நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிக்கை ஒட்டச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர். நிலங்களை அளப்பதற்காகவும், அறிவிக்கை ஒட்டுவதற்காகவும் வாரத்திற்கு ஒரு முறை அதிகாரிகள் படையெடுப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “கம்மாபுரம், கத்தாழை பகுதிகளில் உள்ள நிலங்களை அளப்பதற்காகவும், அறிவிக்கை ஒட்டுவதற்காகவும் வாரத்திற்கு ஒரு முறை அதிகாரிகள் படையெடுப்பது வாடிக்கையாகி விட்டது. அதனால், அப்பகுதி உழவர்களும், பொதுமக்களுக்கும் ஒவ்வொரு நாளும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் தரக்கூடியவை. அவை கையகப்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து உள்நாட்டு அகதிகளாக அவதிப்பட வேண்டியிருக்கும்.

காவிரிப் பாசன மாவட்ட உழவர்களுக்கு ஒரு நீதி…. கடலூர் மாவட்ட உழவர்களுக்கு ஒரு அநீதி கூடாது. இரு பகுதிகளின் உழவர்களும் தமிழ்நாடு அரசு என்ற தாய்க்கு பிள்ளைகள் தான். காவிரி பாசனப் பகுதி உழவர்களுக்கு வழங்கப்பட்ட அதே நீதி கடலூர் மாவட்ட உழவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

கடலூர் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ள அனைத்து பணிகளையும் கைவிட அரசு ஆணையிட வேண்டும்” என அன்புமணி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.