கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பாஜக,
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மற்ற கட்சிகளை காட்டிலும் வேட்பாளர்கள் தேர்வில் பாஜக ரொம்ப லேட் என பலரும் கூறி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று முன்தினம் 189 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியல் வெளியாகியுள்ளது.
சிட்டிங் எம்.எல்.ஏக்கள் ஷாக்
இதில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 7 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை. அவர்களின் சன்னகிரி எம்.எல்.ஏ மாடல் விருபக்ஷப்பா அடங்குவார். இவர் ஊழல் புகாருக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முடிகெரே தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டி வந்த எம்.பி குமாரசாமிக்கு டிமிக்கு கொடுத்துள்ளனர். இதனால் இவர்களின் ஆதரவாளர்கள் பெரிதும் அதிருப்திக்கு ஆளாகி இருக்கின்றனர். கட்சி மேலிடத்தை சந்தித்து எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 18 பேர்
இதுதவிர சி.எம் நம்பன்னவர் (கலகடாகி), எஸ்.ஏ ரவிந்திரநாத் (தாவனகரே வடக்கு), நேரு ஓலேகர் (ஹாவேரி), என்.லிங்கனா (மாயகொண்டா), சுகுமார் ஷெட்டி (பந்தூர்) ஆகியோருக்கும் சீட் வழங்கப்படவில்லை. ஏற்கனவே வெளியான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் சேர்த்தால் சீட் மறுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் துமகுரு மாவட்டத்தில் உள்ள குப்பி சட்டமன்ற தொகுதியில் தனது மகன் அருணுக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் வி.சோமன்னா சீட் வாங்கி விட வேண்டும் என்று தீவிரம் காட்டினார்.
சோமன்னா போட்ட திட்டம்
ஆனால் கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இருப்பினும் கோவிந்தராஜ் நகரில் சீட் வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஹுப்பாளி தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இங்கு போட்டியிட முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் சீட் கேட்டுள்ளார். இதுதொடர்பாக டெல்லி சென்று தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.
பாஜகவில் இருந்து விலகல்
ஒருவேளை சீட் கிடைக்காவிடில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவும் தயாராக இருக்கிறார். இதனால் இந்த தொகுதிக்கு கடைசி கட்டமாக வேட்பாளரை அறிவிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 212 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 12 இடங்களுக்கு வரும் 14ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீட் கிடைக்காத ஏமாற்றத்தில் முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மண் சவாதி பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
ராஜினாமா முடிவு
இதேபோல் பாஜக மேலவை உறுப்பினர் ஆர்.சங்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் ரனேபென்னூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அங்கு அருண் குமார் புஜாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக முடிகெரே தொகுதி பாஜக எம்.எல்.ஏ எம்.பி.குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் இன்று அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.