வளர்ப்பு நாய் தன் வீட்டின் முன்பு தொடர்ச்சியாக மலம் கழித்ததை தட்டிக் கேட்டவரைக் கொன்றதோடு, அவரின் மகனைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூர் சோல தேவனஹல்லி கணபதி நகரில் வசித்தவர் 68 வயதான முனிராஜூ. இவருக்கு முரளி என்ற மகன் இருக்கிறார். அண்டை வீட்டில் வசிக்கும் நாய் வளர்ப்பவரான பிரமோத் என்பவரும் நாய் பயிற்சியாளராக இருக்கும் குமாரும், தொடர்ச்சியாக முனிராஜூ வீட்டின் முன்பு தங்களுடைய நாயை மலம் கழிக்க விட்டிருக்கின்றனர். இதனைக் கேட்டதற்கு பலமாக தாக்கி உள்ளனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் முனிராஜூவின் பேரன் கெளதம் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ’பிரமோத்தும், குமாரும் தொடர்ச்சியாக நாயை வீட்டின் முன்பு மலம் கழிக்கச் செய்தனர்’ என்று குறிப்பிட்டார். மார்ச் 30-ம் தேதி முனிராஜூ இது குறித்து அவர்களிடம் பேசினார். ஆனால் பிரமோத், குமார் மற்றும் குமாரின் மனைவி பல்லவி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. காவல் துறையினரும் பிரமோத் மற்றும் குமாரை எச்சரித்துவிட்டுச் சென்றனர்.
ஏப்ரல் 8-ம் தேதி, முனிராஜூ, கௌதமுடன் செல்கையில், முனிராஜூவின் மகன் அவருக்குத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, பிரமோத்தும், குமாரும் தன்னுடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கு விரைந்து செல்வதற்குள், பிரமோத் முரளியின் தலையில் கிரிக்கெட் மட்டையால் அடித்து நிலைகுலையச் செய்திருக்கிறார். அதோடு மட்டும் நிற்காமல் முனிராஜூவையும் பலமுறை தலையில் அதே மட்டையால் தாக்கி இருக்கிறார். பலத்த காயமடைந்த முரளி, முனிராஜூ மருத்துவமனைக்குச் செல்ல, பலத்த காயத்தினால் முனிராஜூ தாக்கப்பட்ட அன்றே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.