சென்னை: ராஜ் பவனில், ‘திங்க் டு டேர்’ என்ற ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியின் ஐந்தாம் பகுதியின் அங்கமாக ‘தேச வளர்ச்சியில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு’ என்ற தலைப்பில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிறுவனர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய ஆளுநர், “தொண்டு நிறுவனங்களை நிறுவியவர்கள் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர். தன்னார்வ சேவையை ஊக்குவிக்கும் அவர்கள், அசைக்க முடியாத பக்தி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை கொண்டுள்ளனர்.
பல தன்னார்வலர்கள் தங்களுடைய வாழ்க்கையை நற்செயல்களுக்காக அர்ப்பணித்து, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையும் இதயத்தையும் தொட்டு வருகிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்புக் கதைகள், இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்த மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டும். இத்தகையோரைப் பாராட்டுவது ராஜ் பவனுக்குக் கிடைத்த பெருமை” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர், “தேசம் என்பது நமக்கானது என்ற பெருமை உணர்வு, ‘நாம் அனைவரும் ஒரு பெரிய குடும்பம்’ என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் கொள்கைகளை வகுக்கிறது. ஆனால் அடிமட்டத்தில், கொள்கைகள் மிகவும் நீர்த்துப்போகின்றன. அதன் நோக்கம் நீர்த்துப்போகிறது அல்லது வலுவிழக்கிறது.
சேவாபவ என்ற மனித இயல்பு காணப்படுவதில்லை. உங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்துக்கு சேவை செய்யும் ஆசை என்பது, மக்கள் பங்கேற்புடன் கூடிய தாக்கமுள்ள கொள்கைகளை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்துவதில் உள்ளது. அது தாக்கத்தை ஏற்படுத்தி ‘மக்கள் இயக்கம்’ ஆக மாற்றத்தை கொண்டு வரும். நீங்கள் ஒவ்வொருவரும் தேசத்தைக் கட்டி எழுப்புபவர்கள்; உங்கள் பங்களிப்பு இல்லாமல் தேசத்தை கட்டியெழுப்ப முடியாது.
இன்று, தேசம் சுகாதாரம், கல்வி, உடல்நலம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், தொழில்முனைவு போன்ற அனைத்து துறைகளிலும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. மக்கள் சக்தியை நம்பிய தொலைநோக்கு மிக்க தேசிய தலைமையின் கீழ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் எண்ணற்ற அற்புதமான சாதனைகளைச் செய்துள்ளனர். இந்த மாற்றத்தில், பெண் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றால்தான் நாடு வளர்ச்சி அடையும்.
காலநிலை நெருக்கடி போன்ற பல உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான தலைமைத்துவ எதிர்பார்ப்புகளுடன் உலகம் இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது. கோவிட்-19 காலத்தில் இந்தியா தனது திறனை வெளிப்படுத்தியுள்ளது. வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகள் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கியபோது, அதை அவை பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாகப் பார்த்து தடுப்பூசி தேசியவாதத்தைத் தொடங்கின.
இந்தியா தனது தடுப்பூசியை உருவாக்கியபோது, அதை 150க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இலவசமாகப் பகிர்ந்து கொண்டது. நம்மைப் பொறுத்தவரை உலகமே குடும்பம், யாதும் ஊரே யாவரும் கேளிர். வசுதைவ குடும்பகம் என்பது அரசியல் முழக்கம் அல்ல, மாறாக நம் அனைவரிடமும் ஆழமாக வேரூன்றியிருக்கும் நமது பாரம்பரியத்தின் அடிநாதமாகும். நம் தலைமுறையினர் இந்த நம்பிக்கையில்தான் வளர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், ஜி-20 அமைப்பில் இந்தியாவின் தலைமைப் பதவியானது, உலகெங்கிலும் இந்தியா வழங்கக்கூடிய தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பாகும்.
ஸ்ரீ அரவிந்தர் தனது ஐந்து கனவுகளில் இதை விளக்கியுள்ளார். உலகை வழிநடத்துவது இந்தியா மீதான கடமை; இந்தியாவின் தெய்வீக வடிவமைப்பு அது. 2047க்குள் முழுமையாக வளர்ச்சியடையும் வகையில் ஒரு புதிய பாரதம் முன்னேறி வருகிறது. இந்தப் புனித பயணத்தில், மாயாஜால மாற்றத்தைக் கண் கூடாகக் காண்பது நமது அதிர்ஷ்டம் மட்டுமின்றி அது ஒரு தெய்வீக வாய்ப்பும் கூட. தேசத்தை கட்டியெழுப்பும் இந்த நடவடிக்கைக்கு நமது சிறந்த பங்களிப்பை வழங்குவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்” இவ்வாறு பேசியுள்ளார்.