பெரும் சோகம்..! பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் பலியான ராணுவ வீரர்களில்.. 2 பேர் தமிழர்கள்.. முழு பின்னணி!

சண்டிகர்:
பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் பலியான 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தற்போது தெரியவந்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் ராணுவ முகாம் அமைந்துள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். இந்த சூழலில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ராணுவ முகாமுக்குள் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அங்கு ராணுவத்தினரும், அதிகாரிகளும் விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு 4 ராணுவ வீரர்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். இதனைத் தொடர்ந்து, முகாம் முழுவதிலும் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், மர்மநபர்கள் யாரும் சிக்கவில்லை.

அதிக பாதுகாப்பு கொண்ட ராணுவ முகாமில் தாக்குதல் நடந்துள்ளது என்பதால், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவரின் பெயர் கமலேஷ் (24). சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்தவரான இவர், பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ளார். இவரது தந்தை நெசவுத் தொழிலாளி ஆவார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ராணுவப் பணியில் கமலேஷ் சேர்ந்துள்ளார். இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லை.

4 ஆண்டுகளாக கமலேஷ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் தான் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு கமலேஷ் சென்று திரும்பினார். இந்த சூழலில், நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் கமலேஷ் உயிரிழந்துள்ளார்.

அதேபோல, உயிரிழந்த மற்றொரு ராணுவ வீரரான யோகேஷ் குமார் (24) என்பவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் ஆகும். இவர் குறித்த மற்ற விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை. பஞ்சாப் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது அவர்களின் சொந்த ஊர்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் உடல்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதனிடையே, இந்த தாக்குதலை ராணுவ வீரர் ஒருவரே நடத்தி இருக்கக்கூடும் என ராணுவ வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு பஞ்சாப் ராணுவ முகாமில் ஒரு ரைஃபில் துப்பாக்கி 28 குண்டுகளுடன் மாயமாகியது. மேலும், அதே முகாமில் இருந்த ராணுவ வீரர் ஒருவரும் காணாமல் போயுள்ளார். இதனால் இந்த தாக்குதலை அவர் நடத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.