சென்னை: மத்திய அரசு மருத்துவர்களுக்கும் மாநில அரசு மருத்துவர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை சுட்டிக்காட்டியுள்ள மதுரையை சேர்ந்த டாக்டர் சரவணன் அது குறித்த கோரிக்கை ஒன்றை அரசுக்கு முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் சரவணன் விடுத்துள்ள பதிவு வருமாறு;
தரமான மருத்துவம்: ”வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும், தரமான மருத்துவ சிகிச்சையைக் குறைந்த செலவில் பெறுவதற்காக, பலரும் தமிழ்நாட்டிற்கு வருவதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவ துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலமான மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
எனவே தான், தமிழ்நாடு சுகாதாரத்துறையில் இந்தியாவில் உள்ள முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டது. இப்படி தொடர்ந்து தங்கள் பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதியத்திற்காக தொடர்ந்து போராட வைப்பது நியாயமா?”
ஊதிய முரண்பாடு: ”தற்போது உள்ள 8,15,17,20 ஆண்டுகள் முடித்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5,9,11,12 ஆண்டுகள் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று 23.10.2009 தேதி அன்று திமுக ஆட்சியின் போது அரசாணை 354 பிறப்பிக்கப்பட்டது .
4,9,13,20, ஆண்டுகள் கழித்து மத்திய அரசு எம்.பி.பி.எஸ்., மருத்துவர் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் பெறுகின்றனர். இதன் விளைவாக 7வது ஊதியக் குழுவில் 13 ஆண்டுகள் முடித்து 14 வது ஆண்டில் ரூ.1,23,000/- ஒரு மத்திய அரசு மருத்துவர் அடிப்படை ஊதியமாக பெறுகிறார்.
அவர்கள் தனியாரில் தொழில் செய்யாத காரணத்தினால் 20% அடிப்படை ஊதியத்தை கூடுதலாக பெறுகின்றனர். ஒரு மத்திய அரசு எம்.பி.பி.எஸ் மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தும், 9 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 17 ஆண்டுகள் கழித்தும் 13 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 20 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்ற நிலை நிலவுகிறது.”
எவ்வளவு ஊதியம்?: ”இதன் விளைவாக மத்திய அரசு மருத்துவர் 13 ஆண்டுகள் பெறுகின்ற ஊதியமான ரூ.1,23,000 /- த்திற்கு பதிலாக மாநில அரசு மருத்துவர் ரூ.86,000/- ஐ அடிப்படை ஊதியமாக பெறுகின்றர்.
14-வது ஆண்டு முதல் பணி மூப்பு அடையும் வரை மாதம்தோறும் ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை மாநில அரசு மருத்துவர் குறைவான அடிப்படை ஊதியம் பெற வேண்டிய நிலை உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது நடத்தப்பட்ட சட்டமன்ற கூட்டத்தின் போது திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இது சம்மந்தமாக கேள்வி எழுப்பினேன். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் எனது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு ஆவண செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.”
அன்று உறுதி தந்தார்: ”கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, அடுத்து அமையும் திமுக ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம் முதல்வர் அன்று எதிர்கட்சி தலைவராக இருந்த போது, நேரில் வந்து, உறுதியளித்தார்.
ஆனால் திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும், இன்னமும் அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர்களை ஏராளமான முறை சந்தித்து வேண்டுகோள் வைத்த பிறகும் மருத்துவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை.”
சட்டசபை கூட்டத்தொடர்: ”மேலும் சட்டப்போராட்டக் குழு (LCC) அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சென்னை மற்றும் மதுரையில் தர்ணா போராட்டம், கண்ணில் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம், கலைஞரின் பிறந்த நாளையொட்டி மருத்துவர்கள் கூட்டாக தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் என பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
எனவே தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரில், அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்”. இவ்வாறு டாக்டர் சரவணன் கூறியிருக்கிறார்.