யாங்கூன்: மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, அதன் தலைவரான ஆங் சான் சூகி ஆட்சிப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ராணுவத் தரப்பு தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்கவிருந்த ஆங் சான் சூகிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டங்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது. இதனால், அந்நாட்டில் வசிக்கும் பொதுமக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப் பட்டுள்ளன.
இருந்தபோதும் அடக்கு முறைக்கு எதிராக மியான்மரின் பல பகுதிகளில் பல்வேறு ஆயுதம் தாங்கிய குழுக்கள், ராணுவத்துடன் போரிட்டு வருகின்றன. இதனிடையே, மியான்மரின் வடமேற்கு சாகெய்ங் பிராந்தியத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆயுத குழுக்கள் அமைத்து போரிட்டு வருகின்றனர்.
இதையடுத்து இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை மியான்மர் ராணுவம் நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இடைவிடாத தாக்குதல்களை குழு நடத்தி வருகிறது.
இந்நிலையில், சாகெய்ங் பகுதி மீது நேற்று ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் அன்டோனியா குத்தேரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுதான் பயங்கரமானது என்று அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.