மௌலானா அபுல்கலாம் ஆசாத் யார் தெரியுமா? பாடப் புத்தகத்திலிருந்து எப்படி நீக்கலாம்? காங்கிரஸ் கண்டனம்!

சென்னை: 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்திலிருந்து மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய குறிப்புகளை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் நீக்கியிருப்பது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி விடுத்துள்ள பதிவு வருமாறு;

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வி வழங்குவது போன்ற முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியதில் மிகப் பெரிய பங்காற்றிய மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றி 11-வது வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த சில பகுதிகளை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் நீக்கியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கல்வி அமைச்சராக இருந்த போது, கட்டிடக் கலை பள்ளியை நிறுவுதல், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய அறிவியல் நிறுவனங்கள் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா போன்ற அமைப்புகளை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அபுல்கலாம் ஆசாத். அத்தகைய பெருமகனாரின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்வதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்திய அரசமைப்பை உருவாக்குவதில் அரசியல் நிர்ணய சபையில் முக்கிய பங்காற்றியவர் ஆசாத். அதற்காக அமைக்கப்பட்ட 8 பெரிய குழுக்களில் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், சர்தார் படேல், மௌலானா ஆசாத், அம்பேத்கர் ஆகியோர் இந்த குழுக்களுக்கு தலைமை தாங்கியது ஏற்கனவே பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

Congress has condemned the removal of Maulana Abul Kalam Azad from Class 11 Political Science textbook

பல்வேறு கருத்து வேறுபாடுகளை இவர்கள் கொண்டிருந்தாலும், இந்தியாவிற்கு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் கருத்தொற்றுமை அடிப்படையில் நாட்டின் நலன் கருதி செயல்பட்டதை எவரும் மறந்திட இயலாது. ஆனால், தற்போது 11-வது வகுப்பிற்கான புதிய பதிப்பில் ஆசாத்தின் பெயர் மட்டும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

2009 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்ட மௌலானா கல்வி உதவித்தொகை திட்டத்தை கடந்த ஆண்டு பா.ஜ.க. அரசின் சிறுபான்மைத்துறை அமைச்சகம் நிறுத்தியதை அனைவரும் அறிவார்கள்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர் 1946 இல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகவும், பிரிட்டீஷ் தூதுக் குழுவோடு பண்டித நேருவுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் பெரும் பங்காற்றிய அபுல்கலாம் ஆசாத்தின் பங்களிப்பை பா.ஜ.க. அரசு பள்ளி பாடத் திட்டத்திலிருந்து நீக்கியிருப்பதை மிகமிக வன்மையாக கண்டிக்கிறேன்.

Congress has condemned the removal of Maulana Abul Kalam Azad from Class 11 Political Science textbook

பா.ஜ.க. அரசு இத்தகைய இருட்டடிப்பு வேலைகளை செய்தாலும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் அபுல்கலாம் ஆசாத் நிகழ்த்திய பங்களிப்பை எவரும் மூடி மறைத்திட இயலாது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் துரும்பைக் கூட எடுத்துப் போடாத பா.ஜ.க., விடுதலைக்கு பாடுபட்ட தேசிய தலைவர்களின் முக்கியத்துவத்தை கண்டு சகித்துக் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.