ரம்மி அறிவுப்பூர்வமான விளையாட்டு என நீதிமன்றம் கூறுகிறது : சரத்குமார்

சென்னை : 'நீதிமன்றங்கள் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை அறிவுப்பூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளதை கவனத்தில் கொண்டு சட்டச்சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்' என சரத்குமார் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை: ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துதல் மசோதா கடந்த 24ம் தேதி சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, சட்டம் அமலுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

முன்னதாக இச்சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி நிலையில், தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு அமல்படுத்தியதில், தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் விளையாட்டுகளை காவல்துறையினர் பட்டியிலிட்டு வருகின்றனர்.

இதில் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பந்தயம், சூதாட்டம் விவகாரங்களில் மாநில அரசுக்கு இருக்கும் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை அறிவுப்பூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளதை கவனத்தில் கொண்டு சட்டச்சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்.

மேலும், தமிழகத்தில் தடை என்ற போதிலும், பிற மாநிலங்களின் பெயர்களில் பதிவு செய்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் சாத்தியக்கூறுகள் இருப்பதை சிந்தித்து இந்தியா முழுவதும் பந்தயம் வைத்து, பணம் செலுத்தி விளையாடும் அனைத்து வித ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களையும் தடை செய்வதற்கு மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.