பத்திந்தா பஞ்சாபின் பத்திந்தா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், ராணுவ பீரங்கிப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
பஞ்சாபின் பத்திந்தா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமின் குடியிருப்பு பகுதி அருகே, வீரர்களுக்கான உணவகம் உள்ளது. இதன் பின்புறம், பீரங்கிப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் துாங்கிக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், நான்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ராணுவ போலீசாருடன், பஞ்சாப் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பத்திந்தா உளவுப்பிரிவு எஸ்.பி., அஜய் காந்தி கூறியதாவது:
துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது தொடர்பாக விசாரித்து வருகிறோம்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சாதாரண உடையில் இருந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதாக சில வீரர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தில் பீரங்கிப் படையைச் சேர்ந்த சாகர் பன்னே, 25, கமலேஷ், 24, யோகேஷ் குமார், 24, சந்தோஷ் நாகரால், 25, ஆகியோர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்து, 19 வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
பத்திந்தா மூத்த எஸ்.பி., குல்நீத் சிங் குரானா கூறியதாவது:
இதுவரை நடந்த விசாரணையில், இது பயங்கரவாத செயல் அல்ல என்பது உறுதியாகி உள்ளது. படைப் பிரிவுக்குள் ஏற்பட்ட மோதலால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. அது குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பத்திந்தா ராணுவ முகாமில் இருந்து துப்பாக்கி மற்றும் 28 தோட்டாக்கள் சமீபத்தில் காணாமல் போகின. இது குறித்து, நேற்று முன்தினம் மாலை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த துப்பாக்கியை பயன்படுத்தி இந்த சம்பவம் நடந்ததா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.